திரிகடுகம்
திரிகடுகம்
“இழிநீர் போகும் ஒப்பிலா பெண்டிர் தோள் சேரும்,
இழந்து விருந்தினனாய் வேற்றூர் புகழும் – இம்மூன்றும்
அருந்துயரம் காட்டும் நெறி.”
இதில் நாம் பார்க்கும் கருத்து: “இழந்து விருந்தினனாய் வேற்றூர் புகழும்” என்பதாகும். அதாவது, ஒருவர் துன்பத்திலும் வறுமையிலும் இருக்கும்போது, தன்னுடைய உழைப்பின் வழியைத் தேடாமல் வேறு ஊருக்குச் சென்று அங்கு விருந்தினராக வாழ முயல்வது அவருக்குத் துன்பத்தையும் இழிவையும் ஏற்படுத்தும் என்பதை நல்லாதனார் வலியுறுத்துகிறார். ஒருவர் வசதியாகவும், நல்ல பொருளாதார நிலையிலும் இருக்கும்போது வேறு ஊருக்குச் சென்றால், அவர் விருந்தினராக மதிக்கப்படலாம். ஆனால் கையில் எதுவும் இல்லாத நிலையில், தன்னுடைய உழைப்பை நம்பாமல் பிறரைச் சார்ந்து வாழ முயல்வது சிறந்த வாழ்க்கை முறையல்ல. இதனை வலியுறுத்தும் வகையில், திருவள்ளுவரும் உழைப்பின் சிறப்பை எடுத்துரைக்கிறார். நமது உழைப்பால் கிடைக்கும் எளிய உணவாக இருந்தாலும் அது பெருமைக்குரியது. பிறரைச் சார்ந்து கிடைக்கும் பெரிய விருந்தைவிட, நமது உழைப்பால் கிடைக்கும் எளிய உணவே மேலானது. அதேவேளையில், இதன் பொருளை விருந்தோம்பல் கூடாது என்று நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. தமிழர்களின் பண்பாட்டில் விருந்தோம்பலுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. குறிப்பாக, பழங்காலத்தில் இருந்த “திண்ணை பண்பாடு” இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
அந்தக் காலத்தில் வீடுகளின் முன்புறத்தில் திண்ணைகள் இருக்கும். வழிப்போக்கர்கள் இரவு நேரத்தில் வந்து தங்குவதற்கு அந்தத் திண்ணைகள் இடமளித்தன. வீட்டில் இருப்பவர்கள் அவர்களை அன்புடன் வரவேற்று, உணவு வழங்கி, உறங்குவதற்கு இடமும் ஏற்படுத்திக் கொடுத்தனர். மறுநாள் காலையில் உணவு வழங்கி, அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடரவும் வழியனுப்பினர். இதுவே நமது உயர்ந்த தமிழ் பண்பாடு. எனவே, தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதும், உழைத்து வாழ்வதும் இரண்டும் இணைந்து செல்ல வேண்டும். இயேசு சென்ற இடமெல்லாம் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தேடிச் சென்றார். “ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி இயேசு நடந்துசென்றார்” என்ற பாடல் வரிகள் இதை அழகாக எடுத்துரைக்கின்றன. வாழ்வதற்கு வழியில்லாதவர்களை உயர்த்துவதும், அவர்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் நமது கடமையாகும். உண்மையான ஏழை என்பவர் இறைவனை மட்டுமே நம்பி, பிறரை ஏமாற்றும் எண்ணமின்றி, தன்னால் முடிந்த அளவு உழைத்து வாழ விரும்புபவர். அத்தகையவர்களுக்கு வாய்ப்புள்ளவர்கள் துணைநிற்க வேண்டும். அப்போது நமது சமூகத்தில் யாரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள்.
அதே நேரத்தில், உழைக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் பிறரைச் சார்ந்து வாழ்வதைத் தவிர்த்து, உழைப்பைத் தங்கள் வாழ்வின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்புக்கேற்ற நற்பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் நாம் உறுதியாக ஏற்றுக்கொள்வோம். இந்தச் செய்யுள் மேலும் சில தவறான செயல்களும் கேடு விளைவிக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. ஆழம் தெரியாத நீரில் இறங்கி நீந்த முயல்வதும், தகாத உறவுகளில் ஈடுபடுவதும், தன்னுடைய உழைப்பை நம்பாமல் பிறரைச் சார்ந்து வாழ முயல்வதும் மனித வாழ்க்கைக்கு துன்பத்தை ஏற்படுத்தும். எனவே, திரிகடுகத்தின் சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற கருத்துகளைச் சுவைத்து, நமது வாழ்வைத் தூய்மைப்படுத்தி, மேன்மக்களாக உயர்வோம். இன்று நாம் நினைவில் கொள்ள வேண்டிய சிறப்புச் சொல்: “விருந்தினர்.” ஆங்கிலத்தில் Guest என்பதற்கு தமிழில் “விருந்தினர்” என்று அழகான சொல் இருக்கிறது. Guest Room என்பதற்கு “விருந்தினர் அறை” என்று தமிழில் பயன்படுத்தலாம்.
தமிழின் இனிமையையும், நமது பண்பாட்டின் மேன்மையையும் போற்றுவோம். இறைவன் அருளால் மீண்டும் திரிகடுகத்தில் இனிது மகிழ்வோம்.
நன்றி! வணக்கம்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.