தேடுதல்

காஸ்தல் கந்தோல்போவில் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்திய பார்சிலோனா நகரைச் சேர்ந்த செவிலியர் எலிசபெத் அர்ஜெமி காஸ்தல் கந்தோல்போவில் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்திய பார்சிலோனா நகரைச் சேர்ந்த செவிலியர் எலிசபெத் அர்ஜெமி 

திருத்தந்தைக்கு சகோதரரின் வாழ்க்கை குறித்த நூலை வழங்கிய ஸ்பெயின் செவிலியர்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த செவிலியர் எலிசபெத் அர்ஜெமி, காஸ்தல் கந்தோல்போவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்து, தசைச் சிதைவு நோயால் தனது 29ஆவது வயதில் உயிரிழந்த சகோதரர் சேவியர் அர்ஜெமியின் வாழ்க்கையைப் பற்றிய “வாழ்வதற்காக இறக்கக் கற்றுக்கொள்வது' என்ற நூலை வழங்கினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஸ்பெயின் நாட்டு செவிலியரான எலிசபெத் அர்ஜெமி என்பவர், ஆகஸ்ட் 18, செவ்வாய்க்கிழமையன்று காஸ்தல் கந்தோல்போவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மறைந்த சகோதரர் சேவியர் அர்ஜெமியின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகத்தை திருத்தந்தையிடம் வழங்கினார்.

‘வாழ்வதற்காக இறக்கக் கற்றுக்கொள்வது' (Learning to Die in Order to Live) என்ற அந்தப் புத்தகம் சேவியரின் சான்று வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறது. தசைச் சிதைவு நோயுடன் வாழ்ந்த அவர், தனது 29 ஆவது வயதில் காலமானார். நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், சேவியர் வாழ்க்கையை ஆழமாக நேசித்தார். மற்றவர்களை நேசிப்பதன் மூலமும், மற்றவர்களால் தான் நேசிக்கப்படுவதை அனுமதிப்பதன் மூலமும் தனது வாழ்க்கை அர்த்தமடைகிறது என்று அவர் நம்பினார்.

தனது சகோதரரின் இறுதி அஞ்சலியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்த எலிசபெத், அது அவர்கள் வாழ்க்கையில் தன் சகோதரர் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். அவர் ஒரு புனிதமான வாழ்க்கையை வாழ்ந்ததாக விவரித்த எலிசபெத், அவரது நோய் அவரது வாழ்க்கையையோ அல்லது அதன் அர்த்தத்தையோ தீர்மானிக்கவில்லை என்றும் கூறினார்.

சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த திருத்தந்தை உடனான இந்த எதிர்பாராத சந்திப்பின் போது, தனிப்பட்ட முறையில் அர்ப்பணிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, திருத்தந்தை தன்மீது கவனமும், அன்பும், தந்தைக்கே உரிய அரவணைப்பும் காட்டி தனக்கு செவி சாய்த்ததாக எலிசபெத் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் ஸ்பெயினுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை அவர்கள் அளித்த "உங்கள் கண்களை உயர்த்துங்கள்" என்ற செய்தியையும் எலிசபெத் நினைவுகூர்ந்தார். இவரைப் பொறுத்தவரை, இதன் பொருள் துன்பங்கள் மற்றும் சிரமங்களுக்கு அப்பால் பார்த்து, கிறிஸ்துவை மட்டுமே நோக்கி பார்வையை நிலைநிறுத்துவதாகும்.

சேவியரின் சான்று வாழ்வின் மூலம், வாழ்க்கையின் மதிப்பு சூழ்நிலைகளிலோ அல்லது உடல் ஆரோக்கியத்திலோ மட்டும் இல்லை, மாறாக அது அன்பு, நம்பிக்கை மற்றும் உறவுகளில்தான் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு நினைவூட்ட எலிசபெத் விரும்புகிறார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஆகஸ்ட் 2026, 11:57