“துயரத்தில் இணைந்த சகோதரிகள்”: வெறுப்பை வென்ற அன்பும் நட்பும்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இத்தாலிய நகரமான ரிமினியில் 47-வது ‘மக்களிடையேயான நட்புறவுக்கான சந்திப்பு’ தொடங்கியுள்ளது. ஆறு நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்வு, ஆயிரக்கணக்கான மக்களைக் கண்காட்சிகள், விவாதங்கள் மற்றும் சந்திப்புகளுக்காக ஒன்றுதிரட்டுகிறது.
இத்தாலிய எழுத்தாளரான டான்டேயின் 'தெய்வீக நகைச்சுவை' (Divine Comedy) என்ற காவியத்தால் ஈர்க்கப்பட்டு "சூரியனையும் பிற நட்சத்திரங்களையும் இயக்கும் அன்பு" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டிற்கான நிகழ்வுகள் இடம்பெறும்.
தொடக்க நிகழ்வில், 2016-ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள செயிண்ட்-எட்டியென்-டு-ரூவ்ரேயில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு அருள்பணியாளர் ஜாக் ஹேமல் என்பவரின் சகோதரி ரோஸ்லின் ஹேமல் மற்றும் அவரைக் கொன்றவர்களில் ஒருவனான அடெல் கெர்மிச் என்பவரின் தாய் நஸீரா கெர்மிச் ஆகியோரின் நெகிழ்ச்சியான சாட்சியம் இடம்பெற்றது.
இரு பெண்களும் தாங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த அந்தத் துயரமான காலை நேரத்தை நினைவுகூர்ந்தனர். ஒரே வன்முறைச் சம்பவத்தின் இரு வேறுபட்ட பக்கங்களில் இருந்தபோதிலும், ரோஸ்லினும் நஸீராவும் இறுதியில் ஒருவரையொருவர் சந்தித்து, ஆழமான நட்பை வளர்த்துக்கொண்டனர். இன்று அவர்கள் தங்களை “துயரத்தில் இணைந்த சகோதரிகள்” என்று அழைத்துக்கொள்கின்றனர். மேலும், இதே பெயரில் வெளியான ஒரு புத்தகத்தின் மூலம், தங்களின் வேதனை, சந்திப்பு மற்றும் நட்பின் பயணத்தைப் பகிர்ந்துள்ளனர்.
அவர்களின் இந்த சாட்சியம், அன்பு, மன்னிப்பு, நட்பு ஆகியவற்றால் வெறுப்பையும் வன்முறையையும் வெல்ல முடியும் என்பதைக் காட்டுவதோடு, போராலும் பிரிவினையாலும் பாதிக்கப்பட்ட உலகிற்கு நம்பிக்கையை வழங்குவதாக அமைந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.