FILE PHOTO: Abu Dhabi Skyline

2027 சயீத் விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்பு

அமைதியான சகவாழ்வு, உரையாடல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்கும் சயீத் விருது 2027-க்கான பரிந்துரைகள் தற்போது வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை அக்டோபர் 1, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

அமைதியான சகவாழ்வு, உரையாடல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை கெளரவிக்கும் சயீத் விருதுக்கான 2027 ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகள் தற்போது வரவேற்கப்படுகின்றன. வரும் அக்டோபர் 1, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விருதுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம்.

அல்-அசார் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் அகமது அல்-தயீப் மற்றும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு அபுதாபியில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பைத் தொடர்ந்து இவ்விருது நிறுவப்பட்டது. அந்தச் சந்திப்பின் போது, உலக அமைதி மற்றும் சகவாழ்வுக்கான மனித சகோதரத்துவம் பற்றிய ஆவணத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனரான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பெயரால் வழங்கப்படும் இவ்விருது, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையைக் கொண்டுள்ளது. மதம், பாலினம், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் அவர் வழங்கிய மனிதநேயம், மரியாதை மற்றும் சேவையை இது பிரதிபலிக்கிறது.

மனித சகோதரத்துவத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னோடி மனிதநேய முயற்சிகளை அங்கீகரிக்க இவ்விருது முயல்கிறது என்று பொதுச்செயலாளர் நீதிபதி முகமது அப்தெல்சலாம் அவர்கள் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டிற்கான விருது அஜர்பைஜான்-அர்மீனியா நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கும்,  'தாவூன்' (Taawon) என்ற பாலஸ்தீன மனிதநேய அமைப்பிற்கும், ஆப்கானிய பெண் உரிமைப் போராளியான ஜர்கா யாஃப்தாலி என்பவருக்கும் வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, நலவாழ்வு, கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்காற்றியதற்காக 20 நாடுகளைச் சேர்ந்த 20 நபர்களை இவ்விருது அங்கீகரித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஆகஸ்ட் 2026, 16:02