உரோம் பேச்சுவார்த்தையில் லெபனோன்–இஸ்ரேல் எல்லைப் பிரச்சினைகளில் முன்னேற்றம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
உரோம் நகரில் அண்மையில் இடம்பெற்ற லெபனோன் - இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் கைதிகளைத் திரும்பி அனுப்புவது தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லெபனோன் அதிபர் ஜோசப் அவுன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில், போர்நிறுத்தம், வீடுகள் இடிப்பு, எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகளைத் திருப்பி அனுப்புதல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கான முன்னோடிப் பகுதிகளை அடையாளம் காண்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எல்லை மற்றும் கைதிகள் தொடர்பான விடயங்களில் “நேர்மறையான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ள அதிபர் அவுன் அவர்கள், இதனைத் தொடர்ந்து நடைமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் போர்நிறுத்தம் மற்றும் முன்னோடிப் பகுதிகள் போன்ற மீதமுள்ள பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி தீர்வு காணும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூன் மாத இறுதியில் வாஷிங்டனில் எட்டப்பட்ட ஒரு அடிப்படை விதிகள் குறித்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதற்கிடையில், லெபனோனின் மனிதாபிமான நிலைமை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாகவும், பொதுமக்கள் பேரழிவுகரமான மற்றும் அளவுக்கு மீறிய பாதிப்புகளை அனுபவித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் அவையால் நியமிக்கப்பட்ட சுதந்திர மனித உரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அங்கு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, நகரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன, மேலும் தெற்கு லெபனோனில் உள்ள பல சமூகங்கள் இன்னும் செல்ல முடியாத நிலையில் உள்ளன.
லெபனோன் நாட்டின் நலவாழ்வு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த மோதலின் போது 392 பெண்கள் மற்றும் 253 குழந்தைகள் உள்பட குறைந்தது 4,333 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த அண்மைய பேச்சுவார்த்தைகள் லெபனோன்-இஸ்ரேல் எல்லையில் அதிக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய முன்னேற்றத்திற்கான ஒரு முன்னெச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வழங்குகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.