கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

துணிந்து செயல்படும் ஒருவரின் தியாகம், பலருக்கும் விடுதலையைத் தர முடியும். துணிவுடன் செயல்பட்டால், முடியாத திட்டம் என்று எதுவுமில்லை.

பூனைக்கு மணி கட்டிய வீர எலி 

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச

நாட்கள் நகர்ந்தன. பூனைக்கு அஞ்சி, எலிகள் தொடர்ந்து வளைக்குள் பதுங்கியே வாழ்ந்து வந்தன. ஒருநாள், மூத்த எலி ஒன்று மட்டும் தைரியமாக வலையை விட்டு வெளியே வந்து பேசத் தொடங்கியது: “இப்படி கோழைகளாக வளைக்குள் ஒளிந்து வாழ்வதுதான் வாழ்க்கையா? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. போராளிக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தவணை முறையில் சாவு!” மேலும் அது, “பூனைக்கு சாவு மணி அடிக்க ஒரு சாதாரண எலியால் கூட முடியும். துணிந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை” என்று எழுச்சியுடன் பேசத் தொடங்கியது. அதைக் கேட்ட மற்ற எலிகளும் ஒவ்வொன்றாக தங்கள் தலைகளை வெளியே நீட்டின. மூத்த எலியின் உரை அவற்றுக்குள் தைரியத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.

அப்போது, ரப்பர் வளையத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய மணியைக் காட்டிய மூத்த எலி, “இதோ, பூனையின் கழுத்தில் கட்டுவதற்கான மணி தயாராக இருக்கிறது. இதைக் கட்டுவது யார்?” என்று கேட்டது. உடனே, “நான் கட்டுகிறேன்!”, “இல்லை, நான் தான் கட்டுவேன்!” என்று பல எலிகள் போட்டியிட்டன. இறுதியில், ஓர் இளம் எலிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. மணியுடன் புறப்பட்ட அந்த வீர எலி, பூனையின் குகைக்குச் சென்றது. எலியைப் பார்த்தவுடன் பூனை சீறிப் பாய்ந்து அதன் கழுத்தைக் கவ்வியது. ஆனால், அந்த இளம் எலி தனது கடைசி நொடியிலும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, ரப்பர் வளையத்தில் இருந்த மணியைப் பூனையின் கழுத்தில் மாட்டிவிட்டு உயிரிழந்தது. ஆம்! பூனைக்கு வெற்றிகரமாக மணி கட்டப்பட்டுவிட்டது. அந்த வீர எலிக்கு அனைவரும் வீர வணக்கம் செலுத்தினர்.

பலரது விடுதலைக்காக ஒருவர் துணிந்து நிற்பது போதும். ஒரு நல்ல எழுச்சியுரை, கோழையையும் போராளியாக மாற்றும். செயல்படத் துணிந்தால் முடியாத திட்டம் என்று எதுவும் இல்லை. போராளிகள் விதைக்கும் துணிவின் விதைகள், பலரது வாழ்வில் விடுதலையின் கனிகளைத் தரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஆகஸ்ட் 2026, 15:37