கதைகள் ஆயிரம்
பூனைக்கு மணி கட்டிய எலிகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச
ஒரு வீட்டில் ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன. அந்த வீட்டில் இருந்த பூனை, எப்போது வேண்டுமானாலும் வந்து எலிகளைப் பிடித்து வேட்டையாடி வந்தது. இதனால் பயந்துபோன எலிகள், ஒரு நாள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தின. “இப்படியே போனால் நம் இனமே அழிந்துவிடும். இந்தப் பூனையிடமிருந்து நம்மை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது?” என்று கவலையுடன் பேசின. அப்போது ஒரு வயதான எலி ஒரு யோசனையை முன்வைத்தது. “பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிடுவோம். பூனை நடந்து வரும்போது மணி சத்தம் கேட்கும். உடனே நாம் ஓடி ஒளிந்துகொள்ளலாம்” என்றது. அந்த யோசனையைக் கேட்டதும் எல்லா எலிகளும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன. “ஆமாம்! இதுதான் சரியான தீர்வு. பூனை வந்தால் அதன் மணி ஓசையைக் கேட்டு தப்பித்துக் கொள்ளலாம்!” என்று அனைவரும் பாராட்டினர். அப்போது ஒரு எலி, “சரி, ஆனால் பூனையின் கழுத்தில் மணியைக் கட்டப் போவது யார்?” என்று கேட்டது. அவ்வளவுதான்! அனைவரும் அமைதியாகிவிட்டனர். “நீதானே இந்த யோசனையைச் சொன்னாய்; நீயே போய் கட்டு!” என்றது ஒரு எலி. “நான் வயதானவன்; என்னால் முடியாது. நீ போய் கட்டு!” என்றது மற்றொன்று. இப்படியாக ஒவ்வொருவரும் பொறுப்பை மற்றவர் மீது தள்ளத் தொடங்கினர். இறுதியில் யாரும் பூனைக்கு மணி கட்ட முன்வரவில்லை. அந்த நேரத்தில் அருகில் இருந்து பூனையின் சத்தம் கேட்டது. உடனே எல்லா எலிகளும் பயந்து ஓடி ஒளிந்துகொண்டன. அதன்பிறகு “பூனைக்கு மணி கட்டுவது” என்ற திட்டத்தைப் பற்றி எந்த எலியும் பேசவில்லை.
சிந்தனை
திட்டங்களை வகுப்பது எளிது; அதைச் செயல்படுத்துவதுதான் கடினம். பிறருக்காகத் திட்டம் தீட்டும்போது துணிச்சலாகப் பேசுபவர்கள், அதே பொறுப்பு தங்களிடம் வரும்போது பின்வாங்கிவிடக் கூடாது. செயல்படுத்த முடியாத திட்டம் வெறும் கற்பனையாகவே முடிந்துவிடும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.