கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம் 

கதைகள் ஆயிரம்

உண்மையான தலைமை என்பது புகழைத் தேடுவதில் அல்ல; பிறரைத் தாங்கும் தன்னலமற்ற சேவையில்தான் இருக்கிறது. மறைந்து செய்யப்படும் சேவையே மகத்தான சேவை; அடித்தளப் பணியே நிலையான தலைமைக்கான அடையாளம்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச

ஒரு இளையோர் தலைமைப் பயிற்சி வகுப்பில், “சிறந்த தலைவர்களாக வாழ நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று இளைஞர்கள் ஆசானிடம் கேட்டனர். அதற்கு அவர், “கற்களாக மாறுங்கள்” என்று பதிலளித்தார். இளைஞர்கள் அனைவரும் தாங்கள் பளிங்குக் கற்களாக இருக்க விரும்புவதாகக் கூறியபோது, ஆசான் ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைத்தார். “பளிங்குக் கற்கள் ஒளிர்கின்றன; உலகம் அவற்றைப் பாராட்டுகிறது. ஆனால் அந்தப் பளிங்குக் கற்களைத் தாங்கி நிற்பவை அடித்தளத்தில் இருக்கும் கருங்கற்கள்தான். அவற்றை யாரும் பாராட்டுவதில்லை; இருந்தாலும் அவை அமைதியாகத் தங்கள் பணியைச் செய்கின்றன. நீங்கள் அத்தகைய அடித்தளக் கற்களாக இருங்கள்” என்றார். உண்மையான தலைமை என்பது புகழைத் தேடுவதில் அல்ல, பிறரைத் தாங்கும் தன்னலமற்ற சேவையில் இருக்கிறது. ஆலமரத்தின் பிரம்மாண்டமான கிளைகளைப் பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்; ஆனால் அதை நிலைநிறுத்தும் வேர்களை யாரும் காண்பதில்லை. அதுபோலவே, மறைந்து செய்யப்படும் சேவையே மகத்தான சேவையாகும். அதனால்தான் இறைமகன் இயேசு, “உங்களுக்குள் தலைவராக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குப் பணியாளனாக இருக்கட்டும்” என்று போதித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளைப் பேசுபவனே தலைவன் அல்ல; மக்களின் தேவையை உணர்ந்து அமைதியாக அவர்களுக்காக உழைப்பவனே உண்மையான தலைவர். மறைந்த பணியே மகேசன் பணி; அடித்தளப் பணியே நிலையான தலைமைக்கான அடையாளம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஆகஸ்ட் 2026, 14:19