இயேசுவின் திருமுழுக்கின் 2,000ஆம் ஆண்டு: யோர்தானில் சிறப்புக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகள்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றதன் பாரம்பரியமாகக் கருதப்படும் 2,000ஆம் ஆண்டு நிறைவு 2030ஆம் ஆண்டு நினைவுகூரப்பட உள்ளது. இந்நிகழ்வு, யோர்தானில் உள்ள அல்-மக்தாஸ் (Al-Maghtas) திருமுழுக்கு தளத்தில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் நாள், யோர்தான் பிரதமர் ஜாஃபர் ஹசன் அவர்கள் தலைமையில், இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கின் இரண்டாயிரமாவது ஆண்டு விழாவுக்கான தேசிய தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள், கிறிஸ்தவத் திருஅவைத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவ்விழா, யோர்தானின் வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவத்தையும், உலகளாவிய கிறிஸ்தவ திருப்பயணிகளின் முக்கிய தலமாக அதன் நிலைப்பாட்டையும் எடுத்துக்காட்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும், சகவாழ்வு, பிறரை மதித்தல், அமைதி, அன்பு மற்றும் மனித சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை வலியுறுத்தும் வாய்ப்பாகவும் இது அமையும் என்றார்.
திருமுழுக்கு தளத்தைச் சுற்றி கிறிஸ்தவ திருப்பயணிகளுக்கான ஒருங்கிணைந்த கிராமம், இயேசுவின் திருமுழுக்கிற்கென அருங்காட்சியகம், பசுமைப் பாதை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, யோர்தானின் கிறிஸ்தவ பாரம்பரியத்தையும், உலக கிறிஸ்தவர்களை வரவேற்கும் அதன் பணியையும் வெளிப்படுத்தும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக அமையவுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.