காசாவில் பொதுமக்களின் வாழ்க்கையை தொடர்ந்து சீர்குலைக்கும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
காசாவில் தொடர்ந்து இடம்பெறும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாக சீர்குலைப்பதாகவும், தங்குமிடங்களை சேதப்படுத்துவதாகவும், மேலும் பலரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதாகவும் மனிதநேய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) கவலை தெரிவித்துள்ளது.
தங்குமிடங்களை மேம்படுத்தவும், உயிர்காக்கும் உதவிகளை விரிவுபடுத்தவும் மனிதநேய அமைப்புகளுக்கு கட்டுமான மரம், கயிறு, சூரிய ஒளி விளக்குகள் மற்றும் அடிப்படை உபகரணங்கள் போன்றவை உடனடியாகத் தேவைப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதில் சவால்கள் இருந்தபோதிலும், உதவி செய்யும் அமைப்புகள் கடந்த வாரம் காசா நகரில் ஏறத்தாழ 3,000 தற்காலிக தங்குமிடங்களை மேம்படுத்தியுள்ளன மற்றும் ஏறத்தாழ 9,000 குடும்பங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை விநியோகித்துள்ளன.
இதற்கிடையில், எருசலேமின் வடக்கே உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் இடம்பெற்ற இஸ்ரேலிய இராணுவ தாக்குதலின் போது 16 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய செம்பிறைச் சங்கம் (Palestinian Red Crescent Society) தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளித்துவருவதாகவும் பல நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சில சரிபார்க்கப்படாத புள்ளி விவரங்களின் படி, காசாவில், கடந்த 300 நாட்களில் இஸ்ரேல் 4,091 முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 1,254 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 4,121 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், யோர்தான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் காசா முனையில் தொடர்ந்து இடம்பெறும் இஸ்ரேலிய இராணுவத்தின் விதிமீறல்களைக் கண்டித்து கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.