பெலனுக்கு அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர். பெலனுக்கு அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்.  (AFP or licensors)

காலநிலை நெருக்கடி: அதிகரிக்கும் வெப்பமும் காட்டுத்தீயும்

2026 ஜூலை உலகளவில் பதிவான மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக அமைந்ததுடன், பல நாடுகளில் தீவிர வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்பட காரணமாகியுள்ளது. ஜப்பான் 40°C-க்கும் அதிகமான வெப்பநிலையை நீண்ட காலமாக எதிர்கொண்ட நிலையில், வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வெப்பநிலை 49°C-ஐ நெருங்கியது. பிரான்சில் வெப்ப அலைகளால் 7,300-க்கும் மேற்பட்டோர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகளவில் இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இது ஜூலை 2024-ன் வெப்பநிலையை சமன் செய்ததுடன், அனைத்துக் கண்டங்களிலும் வெப்ப அலைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜப்பான் தனது வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாகக் தொடர்ந்து 40°C-க்கு மேல் வெப்பநிலையைச் சந்தித்துள்ளது, வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் 49°C-ஐ நெருங்கிவிட்டன.

ஐரோப்பாவும் தீவிர வெப்பம், வறட்சி மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயால் அவதிப்பட்டது. பிரான்சில் இந்த வரலாறு காணாத வெப்ப அலைகளால் 7,300-க்கும் மேற்பட்டோர் வழக்கத்தை விட அதிகமாக உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

ஐரோப்பாவின் 2026 ஆம் ஆண்டிற்கான காட்டுத்தீப் பருவம் ஏற்கனவே பதிவான மிக மோசமான மூன்று பருவங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சிறந்த பருவநிலைச் சூழல் நிலவினாலும் கூட, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் காட்டுத்தீயால்  எரியக்கூடிய பகுதிகள் 39 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். சிறந்த தீ மேலாண்மை சேதத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றாலும், அது காலநிலை நடவடிக்கைகளுக்கு மாற்றாக அமைய முடியாது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

காலநிலை நெருக்கடியானது "கனவிலும் நினைக்க முடியாத அளவிலான" பேரழிவுகளை உருவாக்கி வருவதாக ஐநா காலநிலை மாற்ற நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல் எச்சரித்துள்ளார். மேலும் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றிலிருந்து விரைவாக மாறுவதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காடுகள் மற்றும் பெருங்கடல்களின் பாதுகாப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நெருக்கடியானது, கூட்டு நடவடிக்கை மூலம் நமது பொதுவான இல்லத்தைப் பேண வேண்டும் என்று மனிதகுலத்தை வலியுறுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட  'இறைவா உமக்கே புகழ்' (Laudato si') என்ற திருத்தூது மடலை நினைவூட்டுகிறது. அதேபோல் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான அழைப்பை விடுத்துள்ளார்.

தீவிரமடைந்து வரும் காலநிலை நெருக்கடியானது, மக்களையும் இந்தப் பூமியையும் பாதுகாக்க அரசுகள், குடிமக்கள் மற்றும் சமூகங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஆகஸ்ட் 2026, 13:40