Aftermath of tropical storm Sara, in El Progreso

ஹோண்டுராஸ்: கவனிக்கப்படாத உள்நாட்டு இடப்பெயர்வு நெருக்கடி

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ், உலகின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட இடப்பெயர்வு நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொள்கிறது. நார்வே அகதிகள் வாரியத்தின் (NRC) தகவலின்படி, ஹோண்டுராஸ் ஆறாவது இடத்தில் உள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாடு பெரும்பாலும் கவனிக்கப்படாத உள்நாட்டு இடப்பெயர்வு நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நாட்டின் எல்லைகளுக்கு உள்ளேயே இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நார்வே அகதிகள் வாரியத்தின் (NRC) தகவலின்படி, உலகின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட இடப்பெயர்வு நெருக்கடிகளில் ஹோண்டுராஸ் ஆறாவது இடத்தில் உள்ளது.

திட்டமிட்ட குற்றங்கள், கும்பல் அச்சுறுத்தல்கள், பணப்பறிப்பு மற்றும் ஆயுதக் குழுக்களின் மாநில ஆதிக்கம் ஆகியவற்றால் ஏற்படும் வன்முறைகள் காரணமாக, பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி வருகின்றனர்.

உலகளாவிய புலம்பெயர்ந்தோர் நெருக்கடிகளைப் போலல்லாமல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறார்கள் என்றும் போதுமான குடியிருப்புகள், வேலைவாய்ப்பு அல்லது அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் நகரங்கள் அல்லது சுற்றுப்புறங்களுக்கு இடையே இடம்பெயர்கின்றனர் என்றும் நார்வே புலம்பெயர்ந்தோர் வாரியம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் இந்த நெருக்கடி மேலும் மோசமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள நார்வே புலம்பெயர்ந்தோர் வாரியம், சூறாவளிகள், வெள்ளம், வறட்சி மற்றும் மோசமான அறுவடைகள் விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமப்புற சமூகங்களைக் குறிப்பாகப் பாதித்துள்ளன என்றும் கூறியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஹோண்டுராஸைத் தாக்கிய எட்டா (Eta) மற்றும் அயோட்டா (Iota) சூறாவளிகள், வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை அழித்து, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்ததோடு, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளன.

மேலும் வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மற்றும் வாய்ப்புகளின்மை உள்ளிட்ட இன்னும் பல காரணங்களும் மக்களின் இடப்பெயர்விற்கு காரணமாகியுள்ளன.

ஆயினும்கூட, இடம்பெயர்ந்த மக்கள் நாட்டிற்குள்ளேயே தங்கியிருப்பதால், அவர்களின் துன்பங்கள் பெரும்பாலும் குறைவான உலகலாவிய கவனம், மனிதாபிமான உதவி மற்றும் ஊடக வெளிச்சத்தையே பெறுகின்றன என்றும் இந்த வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே ஹோண்டுராஸ் நெருக்கடி என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் ஒரு நகர்வு என்பதை விடப் பெரியதாகும். இது பாதுகாப்பு, நிலைத்தன்மை, வாழ்வாதாரங்கள் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் இழப்பைக் குறிக்கிறது. இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் பின்னாலும் பயம், மீள்திறன் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான தேடல் ஆகியவற்றின் கதை உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஆகஸ்ட் 2026, 15:12