உக்ரைன் முதல் மத்திய கிழக்கு வரை தொடரும் மோதல்கள்: அதிகரிக்கும் மனிதாபிமான நெருக்கடி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கோடைகாலம் தொடரும் நிலையில், உக்ரைன், லெபனோன், காசா, ஈரான் மற்றும் சிரியாவில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், பொதுமக்கள் பெருகிவரும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
உக்ரைனில், இரஷ்யாவும் உக்ரைனும் தொடர்ந்து இரவில் தாக்குதல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இந்நிலையில் குறைந்தது ஆறு பேரைக் கொன்ற மற்றும் 19 பேரைக் காயப்படுத்தியுள்ள ஜபோரிஜியாவின் மீதான தாக்குதலில் இரஷ்யா வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
வோரோனேஜில் உள்ள இரஷ்ய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரிஸுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளையும் உக்ரேனியப் படைகள் தாக்கியுள்ளன. முன்னதாக, தடர்ஸ்தானில் இடம்பெற்ற உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு யுனிசெஃப் (UNICEF) தொடர்ந்து உளவியல் மற்றும் அவசரகால ஆதரவை வழங்கி வருகிறது.
மத்திய கிழக்கில், மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய கிராமமான தாய்பேவை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு 13 பாலஸ்தீனியர்களைக் கைது செய்துள்ளன. தெற்கு லெபனோனில், உள்ளூர் மனிதாபிமான அமைப்புகளால் இயக்கப்படும் அவசர மருத்துவ ஊர்திகள் காயமடைந்த ஒருவரைக் கொண்டு செல்லும் போது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று அவற்றின் மீது தாக்குதல் தொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில், தற்போதைய கப்பல் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மாலுமிகளிடையே கடுமையான மனநல அழுத்தங்கள் குறித்து அனைத்துலக கடல்சார் அமைப்பு எச்சரித்ததுடன், அவர்களின் தேவைகளை அங்கீகரித்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையில், சிரியாவில், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு அவர் நேரில் வராத நிலையிலும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இருப்பினும், ரஷ்யாவிலிருந்து அவர் நாடு கடத்தப்படுவது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.