தேடுதல்

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்  

கொலம்பியா நிலநடுக்கம்: குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை – செஸ்வி

ஆகஸ்ட் 10 அன்று கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 53,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், ஏறத்தாழ 4,000 பேர் காயமடைந்து, 300 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சொக்கோ மற்றும் புவெனவென்ச்சுரா பகுதிகளில் பல குடும்பங்கள் வீடுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் இழந்துள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 10 அன்று கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒரு கடுமையான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த‌ நிலநடுக்கத்தால் ஏறத்தாழ 4,000 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குறைந்தது 53,000 மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொக்கோ மற்றும் புவெனவென்ச்சுரா போன்ற கிராமப்புற பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பல குடும்பங்கள் தங்களுடைய வீடுகளையும் அடிப்படை தேவைகளையும் இழந்துள்ளன.

இந்நிலையில் செஸ்வி என்ற மனிதநேய அமைப்பு, குடிநீர், நலவாழ்வு, பாதுகாப்பு மையங்கள் மற்றும் உளவியல் ஆதரவு உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கி வருகிறது. உள்ளூர் சந்தைகள் மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் குடும்பங்கள் மீண்டும் பொருளாதார சுதந்திரத்தைப் பெற வாய்ப்புள்ளதாக இந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கடத்தப்படுதல் மற்றும் சுரண்டப்படுவதற்கான ஆபத்து அதிகரித்திருப்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. குடும்பப் பிரிவினை மற்றும் இத்தகைய பேரழிவைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பங்கள், குழந்தைகளை ஆயுதக் குழுக்கள், துணை இராணுவ அமைப்புகள் மற்றும் குற்ற வலைப்பின்னல்களின் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய நிலைக்குத் தள்ளக்கூடும் என்று செஸ்வி தலைமை இயக்குநர் ஸ்டெபானோ பிசியாலி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் நேரடியாகப் பணியாற்றக்கூடிய, நம்பிக்கையை உருவாக்கக்கூடிய, அவர்களின் தேவைகளைப் பற்றிப் பேச ஊக்குவிக்கக்கூடிய மற்றும் அவர்கள் பாதுகாப்பாக உணர்வதை உறுதிசெய்யக்கூடிய பயிற்சி பெற்ற பணியாளர்களின் அவசியத்தை செஸ்வி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

"இந்த நிலநடுக்கம், ஏற்கனவே வறுமை மற்றும் இடம்பெயர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த பழங்குடி சமூகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றும் "அவசரக் காலக்கட்டத்தைத் தாண்டியும் மனிதநேய முயற்சிகள் தொடர வேண்டும்"  என்றும், குறிப்பிட்டுள்ள செஸ்வி அமைப்பு, "குழந்தைகளையும், பழங்குடி மக்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் அதே வேளையில், சமூகங்கள் தங்களை மீண்டும் கட்டி எழுப்ப உதவ வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் மேற்கொள்ளப்படும் மனிதநேய முயற்சிகளுக்குத் தொடர்ந்து உலகளாவிய கவனமும் ஆதரவும் தேவை என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஆகஸ்ட் 2026, 11:45