வெனிசுலா வெனிசுலா  (AFP or licensors)

வெனிசுலா நிலநடுக்கம்: 47 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிய யுனிசெஃப்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, யுனிசெஃப் 47 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 24ஆம் தேதி வெனிசுலாவை தாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, 47 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை யுனிசெஃப் (UNICEF) அனுப்பியுள்ளது.

கோபன்ஹேகனில் உள்ள யுனிசெஃப்பின் உலகளாவிய விநியோக மையத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் அவசர மருத்துவக் கருவிகள், பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பொருட்கள், தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள் மற்றும் நலவாழ்வுக் கருவிகள், குழந்தைகளுக்கான தற்காலிகப் பாதுகாப்பான கூடாரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், கல்வி மற்றும் வினோதப் பொழுதுபோக்கு பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான யுனிசெஃப் மாநில இயக்குநர் ராபர்ட்டோ பெனெஸ், இந்த உதவி மிகவும் அவசியமான நேரத்தில் வந்துள்ளதாகவும், சுத்தமான குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாமல் பல குடும்பங்கள் தொடர்ந்து நிலநடுக்கத்தின் பின்அதிர்வுகளை அச்சத்துடன் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டில் வெனிசுலாவை தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கமாகக் கருதப்படும் இந்தப் பேரிடரால், ஆறு மாநிலங்களில் ஏறக்குறைய 6 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மனிதாபிமான உதவியை எதிர்நோக்கியுள்ளனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக பனாமாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணத்துடன் சேர்த்து, இந்த உதவிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இந்த அவசரநிலைக்கு பதிலளிக்க 5 கோடியே 20 இலட்சம் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாகவும், தொடக்க நடவடிக்கைகளுக்காக 35 இலட்சம் அமெரிக்க டாலரை தனது அவசர நிதியிலிருந்து யுனிசெஃப் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஜூலை 2026, 13:00