போரின் மறைமுக பலி குழந்தைகள்: உலகளாவிய வறுமை அதிகரிக்கும் என யுனிசெஃப் எச்சரிக்கை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் மோதலால் ஏற்படும் திடீர் பொருளாதார சரிவால், இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் 2.3 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் வறுமைக்குள் வீழக்கூடும் என்றும், இது பல ஆண்டுகால உலகளாவிய முன்னேற்றத்தை பின்னோக்கிச் செல்ல வைக்கும் என்றும் யுனிசெஃப் அமைப்பின் (UNICEF) அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
"மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இடம்பெறும் மோதலுக்குக் குழந்தைகளே அதிகபட்ச விலையைக் கொடுக்கின்றனர்" என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் அவர்கள் தெரிவித்துள்ளார். 167 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் அமைந்த இந்த அறிக்கையானது, உணவு மற்றும் எரிசக்தி விலை அதிகரிப்பு, உலகளாவிய பொருளாதார இடையூறுகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துச் சிக்கல்கள் ஆகியவை மக்களை அடிப்படைத் தேவைகளை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அறிக்கையின்படி யுனிசெஃப் இரண்டு சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது. ஒன்று பாதகமான சூழ்நிலையில், ஏறத்தாழ 1.83 கோடி குழந்தைகள் கூடுதலாக வறுமையில் விழக்கூடும். இரண்டாவதாக, மிகக்கடுமையான நிலை உருவாகும் சூழலில், நீண்டகால மோதல் அந்த எண்ணிக்கையை 2.34 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பல குடும்பங்கள் உணவு, கல்வி, மருத்துவ வசதி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைப் பெறப் போராடி வருவதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
"நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்றும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
நலவாழ்வு, ஊட்டச்சத்து, கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக உதவித் திட்டங்களில் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு அரசுகள், உலகளாவிய நன்கொடையாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்கு முன்பு குழந்தைகளின் உயிர்களையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, கடன் நிவாரணம் மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கவும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.