தேடுதல்

KENYA-UN-CLIMATE-DROUGHT-CHOPRA

சூடானில் அதிகரிக்கும் வன்முறை: 2026 முதல் ஆறு மாதங்களில் 330 குழந்தைகள் உயிரிழப்பு அல்லது காயம்

2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சூடானில் தொடரும் ஆயுத மோதல்களால் குறைந்தது 330 குழந்தைகள் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் சிறுவர் நல அமைப்பான யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சூடானில் நடைபெற்று வரும் ஆயுத மோதல்களால் குறைந்தது 330 குழந்தைகள் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளனர். இதில், டார்ஃபூர் மற்றும் கோர்டோஃபான் பகுதிகளில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அல் ஒபெய்த் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. 2026 மே மாதம் முதல், டிரோன் தாக்குதல்கள் மற்றும் பிற தாக்குதல்களால் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயது இரண்டு மாதம் முதல் 17 வயது வரை உள்ளது. மொத்த குழந்தைகள் உயிரிழப்பு மற்றும் காயமடைந்த சம்பவங்களில் ஏறக்குறைய  60 விழுக்காடு டிரோன் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீர் வசதிகள் மற்றும் சந்தைகள் சேதமடைந்துள்ளதால், அத்தியாவசிய சேவைகளும் மனிதாபிமான உதவிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அல் ஒபெய்த் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பொதுமக்கள் ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பின் சூடான் பிரதிநிதி ஷெல்டன் யெட் அவர்கள், வன்முறை, இடம்பெயர்வு மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றின் முடிவில்லாத சுழற்சியில் குழந்தைகள் சிக்கித் தவிப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு அப்பால், ஆயுதக் குழுக்களில் கட்டாயமாகச் சேர்க்கப்படுதல், கடத்தல், பாலியல் வன்முறை மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் போன்ற கடுமையான ஆபத்துகளையும் அவர்கள் எதிர்கொள்வதாக ஷெல்டன் யெட் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களையும், குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளை சேதப்படுத்துவதைத் தவிர்க்கவும், மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய அனுமதிக்கவும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரிடமும் யுனிசெஃப் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஜூலை 2026, 12:52