ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வான் பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைன் வலியுறுத்தல்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஞாயிற்றுக்கிழமை இரவு உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்யா ஏவிய 23 பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுப்பதற்கான 'இடைமறிக்கும்' ஏவுகணைகள் தங்களிடம் போதிய அளவில் இல்லை என்று உக்ரைனின் வான்படை தெரிவித்துள்ளது.
கீவ் நகரில் 13 பேரும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 6 பேரும் உயிரிழந்த இந்தத் தாக்குதல், ஒரே வாரத்திற்குள் உக்ரைன் தலைநகர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதலாகும்.
உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்த வாரம் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில் "உறுதியான முடிவுகளை" எடுக்குமாறு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ தலைவர்களுக்கு உக்ரைனின் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் படைகள் குரூஸ் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானத் தாக்குதலையும் வெற்றிகரமாகத் தடுத்த போதிலும், இடைமறித்து தாக்கும் அமைப்புகளின் பற்றாக்குறை காரணமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
"ரஷ்யா ஒரே இரவில் 68 ஏவுகணைகளையும் 351 ஆளில்லா விமானங்களையும் தாக்குதலுக்காக ஏவியுள்ளது" என்றும் "வான் பாதுகாப்புப் படையினர் 37 ஏவுகணைகளையும் 326 ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்" என்றும் தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள், மாஸ்கோ வேண்டுமென்றே பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தியது, இது ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள செவஸ்டோபோல் பகுதியில் தற்காலிக மின்சாரத் தடையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் உக்ரைன் 625 நீண்ட தூரம் செல்லும் ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை தடுக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் குறைந்தது 1,270 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 7,000 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் அதிகமாகப் பயன்படுத்துவது பொதுமக்களின் துயரத்தை தீவிரப்படுத்தியுள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.