தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

ஒழுக்கமற்ற ஆசைகள் ஒரு மனிதனின் வாழ்வையும், குடும்பத்தையும், எதிர்காலத்தையும் சீரழிக்கக் கூடியவை. தூய்மையான எண்ணங்களும் பொறுப்பான வாழ்க்கை முறையும் மனித மாண்பைக் காக்கும் உறுதியான அடித்தளமாகும்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

திரிகடுகம் நூலின் ஐந்தாம் செய்யுளான "ஒப்ப விளைவு பெண்டிர்தோள் சேர்வும்" என்ற இந்த வரி, ஒழுக்கமற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதால் ஏற்படும் அழிவைப் பற்றி எச்சரிக்கிறது. இங்கு கூறப்படுவது, எந்த ஒரு பெண்ணையும் இழிவாகப் பார்ப்பதற்காக அல்ல. மாறாக, மனிதர்களை பொருளாகக் கருதி, பணத்திற்காக பாலியல் சுரண்டல் நடைபெறும் சூழல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே இதன் மையக் கருத்தாகும். இத்தகைய உறவுகள் ஒருவரின் ஒழுக்கத்தையும், குடும்ப வாழ்வையும், மனநலத்தையும், சமூக மரியாதையையும் பாதிக்கும். எனவே, அவை துன்பத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதை திரிகடுகம் உணர்த்துகிறது. பழமொழி ஒன்று கூறுகிறது: "ஆழம் தெரியாமல் காலை விடாதே." ஓடும் நீரின் ஆழம் தெரியாமல் அதில் இறங்குவது எப்படி ஆபத்தானதோ, அதுபோல விளைவுகளை அறியாமல் தவறான ஆசைகளுக்குள் நுழைவதும் வாழ்க்கையைச் சீரழிக்கும். இன்றைய உலகில் இணையம், அலைபேசி, சமூக ஊடகங்கள் போன்றவை நல்லவற்றிற்குப் பயன்படுவதோடு, தவறான வழிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளுடன் உரையாடி, பொறுப்புடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் நபர்களை இழிவாகப் பார்க்காமல், அவர்களும் பல நேரங்களில் வறுமை, ஏமாற்றம் அல்லது கட்டாயத்தின் காரணமாக அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும். அவர்களை மதிப்புடனும் இரக்கத்துடனும் அணுகி, மீண்டும் கண்ணியமான வாழ்க்கைக்கு வர உதவுவது சமூகத்தின் பொறுப்பாகும். நமது எண்ணங்கள் தூய்மையாகவும், ஒழுக்கமாகவும், பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும். பிறரின் மாண்பையும் நமது வாழ்க்கை மதிப்புகளையும் காக்கும் வகையில் வாழ உறுதியேற்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூலை 2026, 14:16