திரிகடுகம்
அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்
தமிழ் இனிய நெஞ்சங்களுக்கு வணக்கம்!
திரிகடுகம் நிகழ்ச்சியில் இணைந்து பயணித்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பான நன்றியும் வாழ்த்துகளும். இன்று திரிகடுகத்தின் ஐந்தாம் செய்யுளைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.
அருந்துயரம் காட்டும் நெறி:
வழங்காத் துறையிழிந்து நீர்போக்கும்,
ஒத்த விழைவிலாப் பெண்டிர்தோள் சேர்வும்,
விருந்தினனாய் வேற்றூர் புகலும் –
இம்மூன்றும் அருந்துயரம் காட்டும் நெறி.
இந்தச் செய்யுள், மனிதனைப் பெரும் துன்பத்திற்கும் அழிவிற்கும் இட்டுச் செல்லும் மூன்று செயல்களை எடுத்துரைக்கிறது.
1. அறியாத துறையில் இறங்கி நீராடுதல்
முதலாவது, யாரும் பயன்படுத்தாத, பாதுகாப்பு தெரியாத ஆற்றுத் துறையில் இறங்கி நீராடுவது. அந்த இடத்தின் ஆழம் எவ்வளவு? அடியில் கற்களா, முட்களா? சுழல் நீரா? வேகமான நீரோட்டமா? எதுவும் நமக்குத் தெரியாது. தெரியாத இடத்தில் துணிந்து இறங்குவது ஆபத்தையே வரவழைக்கும். அதனால்தான் பழமொழி ஒன்று கூறுகிறது:
"உள்ளூர் பேய்க்கும் வெளியூர் தண்ணீருக்கும் அச்சம் வேண்டும்."
எச்சரிக்கையுடன் செயல்படுவது அறிவின் அடையாளம்.
2. விருப்பமில்லாத உறவுகளில் ஈடுபடுதல்
இரண்டாவது, பிறரின் விருப்பமின்றி அல்லது ஒழுக்கமற்ற உறவுகளில் ஈடுபடுவது.இத்தகைய செயல்கள் தனிமனிதனின் மதிப்பையும், குடும்ப அமைதியையும், சமூக நற்பெயரையும் சீரழிக்கும். ஒழுக்கமற்ற இன்பம் இறுதியில் துன்பத்தையே தரும் என்பதை இந்தச் செய்யுள் உணர்த்துகிறது.
3. ஆதரவின்றி அந்நிய ஊரில் வாழ முயற்சித்தல்
மூன்றாவது, எந்த ஆதரவும் இல்லாமல் அந்நிய ஊரில் விருந்தினனாக வாழ முயல்வது.புதிய இடம், புதிய மக்கள், புதிய சூழல் – இவற்றை அறியாமல் அவசரமாக முடிவெடுத்தால் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும்.
திருவள்ளுவரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்:
"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்."
அதாவது, செய்யக்கூடாத செயல்களைச் செய்தாலும் தீமை; செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருந்தாலும் தீமை. எனவே நமது திறமை, எல்லை, சூழ்நிலை ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அதையே செய்யக்கூடாது. கல்வி, அறிவு, ஒழுக்கம், சான்றோர்களின் அறிவுரைகள், நல்ல நூல்கள், வரலாற்றுப் பாடங்கள் – இவை அனைத்தும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க நமக்கு வழிகாட்டுகின்றன. அறியாமையாலும் அவசரத்தாலும் நமக்கே நாமே தீமையை வரவழைத்துக்கொள்ளக் கூடாது.
தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு:
"யானை தன் தலைமேல் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது போல."
பகுத்தறிவு கொண்ட மனிதன் தனது வாழ்க்கையைத் தானே சீரழித்துக்கொள்ளக் கூடாது. எனவே, தவறான முடிவுகளைத் தவிர்ப்போம். நல்லவற்றைத் தேர்ந்தெடுப்போம். ஒழுக்கத்தோடும் பொறுப்போடும் வாழ்வோம்.
நன்மைகளைச் செய்வோம்; தீயவற்றைத் தவிர்ப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.