தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

நல்லவர்கள் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அவற்றின் இயல்பை உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே உண்மையான அறிவுடைமையாகும். சூழ்நிலையை அறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது தனிநபரையும், அறத்தையும், சமூக நலனையும் பாதுகாக்கும்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

திரிகடுகம் தொடரில் இன்று நான்காவது செய்யுளைப்பற்றி பார்பபோம்.

நல்லாதனார், "சாவதற்கு ஏதுவான செயல்கள்" குறித்து பேசும்போது ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார். அவர் கூறும் ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், பெரிய பசுமாட்டுக் கூட்டத்திற்குள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் செல்வது ஆபத்தானது என்பதாகும். அதாவது, கையில் ஒரு கோல் அல்லது கம்பு போன்ற தற்காப்புக் கருவி இல்லாமல் மாட்டுக் கூட்டத்திற்குள் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால், கையில் ஒரு கோல் இருந்தால், மாடுகள் விலகிச் செல்லும். இங்கு எந்த உயிரினத்தையும் இழிவுபடுத்துவதோ, அவற்றைத் தாக்க வேண்டும் என்பதோ நோக்கமல்ல. மாறாக, தற்காப்பு அவசியம் என்பதையே நல்லாதனார் எடுத்துரைக்கிறார்.

திருவள்ளுவரும் "புலால் மறுத்தல்" என்ற அதிகாரத்தில் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று வலியுறுத்துகிறார். இரக்கத்தைப் போதிப்பவர்கள் உயிர்களைக் காப்பவர்களாக இருக்க வேண்டும். எனவே, எந்த உயிரினத்தையும் அழிப்பது அல்லது துன்புறுத்துவது இந்தச் செய்யுளின் கருத்தல்ல. விலங்குகள் இயல்பாகத் தங்களின் இயற்கைச் செயல்பாடுகளையே செய்கின்றன. அவற்றிற்கு மனிதனைப் போல பகுத்தறியும் திறன் இல்லை. சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளும் அப்படித்தான். அவை யாரைத் தாக்குகின்றன, யார் நிரபராதி என்பதை அறிந்து செயல்படுவதில்லை. இதற்கு ஒரு வரலாற்று எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை நினைவுகூரலாம். அவர் தினமும் ஒரு யானைக்குத் தேங்காய் கொடுத்து வந்தார். ஆனால் ஒரு நாள், அந்த யானை அவரைத் துதிக்கையால் தாக்கியது. அதுவே அவரது உடல்நிலை பாதிக்கக் காரணமான நிகழ்வாக அமைந்தது. இருந்தாலும், படுக்கையிலிருந்தபோது, "யானையை யாரும் திட்டாதீர்கள்; அதற்குப் பகுத்தறிவு இல்லை" என்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என்று பாடிய பாரதியார், எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டவராகவே வாழ்ந்தார்.

எனவே, உயிரினங்களை வெறுப்பதோ, அழிப்பதோ அல்ல; அவற்றின் இயல்பை அறிந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்வதே அறிவுடைய செயலாகும். இதனால்தான் திருவள்ளுவர்,

"வகையறிந்து தற்செய்து தற்காப்பு மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு."

என்று கூறுகிறார்.

அதாவது, சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து, தற்காப்பிற்கான முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டால், பகைவரின் ஆணவமும் சூழ்ச்சியும் பயனற்றுப் போய்விடும்.

நல்லவர்கள் நல்லவர்களாக வாழ்வது மட்டும் போதாது. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில், நல்லவர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் அறமும், நீதியும், இறையாட்சியும் இந்த உலகில் வளர முடியும்.

எனவே, கையில் கம்பு வைத்துக்கொண்டு மாட்டுக் கூட்டத்தைக் கடப்பது என்பது மாடுகளை அடிப்பதற்காக அல்ல; தற்காப்பிற்காக. "எனக்கு தைரியம் இருக்கிறது", "மாடு என்னை ஒன்றும் செய்யாது" என்று எண்ணி அலட்சியமாக நடப்பது அறிவுடைமையல்ல. பகுத்தறிவு பெற்ற மனிதன், சூழ்நிலையை உணர்ந்து, தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அது பிற உயிர்களுக்கு தீங்கு செய்வதற்காக அல்ல; தன்னையும், அறத்தையும், சமுதாய நலனையும் பாதுகாப்பதற்காக.

இன்றைய சிறப்புச் சொல்: "கரம்".

"கரம்" என்பது தமிழ்ச்சொல் அல்ல; அது சமஸ்கிருதச் சொல். தமிழில் அதற்குப் பதிலாக "கை" என்பதே சரியான சொல். எனவே, "நம் கரங்கள்" என்பதற்குப் பதிலாக "நம் கைகள்" என்று கூறுவதே தமிழுக்கு ஏற்றதாகும்.

நன்றி. வணக்கம்!

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூலை 2026, 13:12