நிகரகுவாவில் குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
நிகரகுவா நாட்டின் குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளாக நீட்டிக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்த மசோதா அந்நாட்டு தேசிய சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தம், பதவிக்காலத்தை மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பையும் விரிவுபடுத்துகிறது.
தேசிய சட்டப்பேரவைத் தலைவர் குஸ்தாவோ பொராஸ் அவர்கள், இந்த மசோதாவை அவையில் முன்வைத்தார். நாட்டின் அவசரத் தேவைகளுக்கு நிலையான தொலைநோக்குப் பார்வை, திறன்மிக்க நிர்வாகம் மற்றும் தொடர்ச்சியான செயல்பாடு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய மனித மேம்பாடு மற்றும் வறுமையிலிருந்து விடுதலைக்கான தேசியத் திட்டத்தின் முன்னுரிமைகள் மற்றும் கால அட்டவணைக்கு ஏற்ப அரசு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த முன்மொழிவு, தேர்தல் முறையை நீக்கலாம் என அண்மையில் குடியரசுத் தலைவர் டேனியல் ஒர்டேகா அவர்கள் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவரும், டேனியல் ஒர்டேகாவின் மனைவியுமான ரோசாரியோ முரில்லோ, இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தம் வரும் செப்டம்பர் மாதத்தில் சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகள், இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி கவலை தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.