நிக்கராகுவா அதிபர் டேனியல் ஒர்டேகா நிக்கராகுவா அதிபர் டேனியல் ஒர்டேகா 

நிக்கராகுவா: எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் தேர்தல்கள் இனி நடைபெறாது என அறிவித்த அதிபர் ஒர்டேகா

நிக்கராகுவா அதிபர் டேனியல் ஒர்டேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும் தேர்தல்கள் இனி நடைபெறாது என்று அறிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

நிக்கராகுவா அதிபர் டேனியல் ஒர்டேகா அவர்கள், தனது அரசிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் தேர்தல்கள் இனி நடக்காது என்று அறிவித்துள்ளார். 1979 ஆம் ஆண்டு இடம்பெற்ற சாண்டினிஸ்டா புரட்சியின் 47வது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டங்களின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சீர்திருத்தங்கள் அவரது மனைவி ரொசாரியோ முரில்லோவை இணை அதிபராக அறிவித்ததுடன், அதிபரின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டித்து, அதிகாரத்தின் மீதான ஒர்டேகா குடும்பத்தின் பிடியை வலுப்படுத்தியுள்ளது. தேர்தல்கள் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பதை ஒர்டேகா விளக்கவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை வரும் 2027 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த அதிபர் தேர்தல் குறித்த ஐயத்தை எழுப்பியுள்ளது.

80 வயதான ஒர்டேகா, 1980களில் அதிபராகப் பணியாற்றிய பிறகு, 2007 முதல் தற்போது வரை  மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மக்களாட்சிக் குடியரசு நாடான நிக்கராகுவா எனும் நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய வணிக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு, அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒடுக்கப்பட்டதால் அந்தத் தேர்தல் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

மனித உரிமை அமைப்புகள் அண்மையில் வெளியான இந்த அறிவிப்பை வன்மையாகக் கண்டித்துள்ளன. 2021 தேர்தலுக்குப் பிறகு சிறையிலடைக்கப்பட்டு, 2023 இல் அமெரிக்காவிற்கு விடுவிக்கப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சி வேட்பாளரான ஜுவான் செபாஸ்டியன் சாமோரோ, சாண்டினிஸ்டா கட்சிக்குள் அதிகாரத்தை குவிக்கும் அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டத்தை இந்த முடிவு உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

"குறைந்தது 46 அரசியல் கைதிகள் இன்னும் காவலில் உள்ளனர்" என்றும் "2018 ஆம் ஆண்டு முதல், நிக்கராகுவாவில் உள்ள பெரும்பாலும் மதக் குழுக்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட அமைப்புகள் மூடப்பட்டுள்ளது" என்றும் அரசியல் கைதிகளை அங்கீகரிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை, அண்மையில் வழக்கறிஞர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூலை 2026, 14:52