நெறி காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள்  ( nerikattum alumaigal 28 Allegati)

நெறி காட்டும் ஆளுமைகள்

உலகையே வென்ற பேரரசுகள்கூட காலத்தின் ஓட்டத்தில் மறைந்துவிட்டன; ஆனால் அன்பு, நீதி, மனிதநேயம் என்றென்றும் நிலைத்திருக்கும். வெற்றி என்பது ஆட்சியில் அல்ல; பிறரின் இதயத்தில் அழியாத இடம் பெறுவதில்தான் உண்மையான மகத்துவம் உள்ளது.

வீழ்ச்சி அடையாத பேரரசு எதுவும் உண்டோ?

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் மாணவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். உலகின் பெரும்பாலான நாடுகளை வென்று, வெற்றிக் கொடியை நாட்டியவன் அவன். ஒருநாள், உலகை வென்ற பெருமிதத்துடன், கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த தனது குருவான அரிஸ்டாட்டிலிடம் அலெக்சாண்டர் வந்தான். "குருவே! உலகையே வென்று விட்டேன். இன்று நான் பேரானந்தத்தில் இருக்கிறேன்," என்றான். அப்போது அரிஸ்டாட்டில் புன்னகைத்தபடி கூறினாராம்: "அப்படியா, அலெக்சாண்டரே! ஆனால் நீ வென்றது உண்மையில் உலகையா, அல்லது எண்ணற்ற உயிர்களின் அமைதியையா? நாட்டுப்பற்று என்ற பெயரில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தாய். எத்தனையோ பெண்களை விதவைகளாக்கினாய். அவர்களின் கண்களில் முடிவில்லாத கண்ணீரை நிரப்பினாய். எத்தனையோ குழந்தைகளை அனாதைகளாகவும், நடுத்தெருவில் பசியோடு தவிக்குமாறும் ஆக்கினாய். பிற நாடுகளின் செல்வங்களைச் சூறையாடினாய். அரிய பொருட்களை அபகரித்தாய். விலைமதிக்க முடியாத காலத்தையும் போர்க்களங்களில் வீணடித்தாய். உன் வெற்றிப் பயணத்தில், உன் சொந்த படைவீரர்களைக் கூட அநியாயமாக மரணத்திற்கு அனுப்பிவைத்தாய்.

இவ்வளவு அழிவுகளை ஏற்படுத்திவிட்டு, 'உலகை வென்றேன்' என்று பெருமை பேசுகிறாயா? இதோ, எனக்கும் உனக்கும் சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இல்லை. இருந்தாலும், நாங்கள் இங்கே எவ்வளவு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம் பாரு."இவ்வாறு தன் அருகில் வாலை ஆட்டிக்கொண்டிருந்த வளர்ப்பு நாயிடம் சொல்லிக் கொண்டே சிரித்தாராம் அரிஸ்டாட்டில்.

இந்தக் கதை நமக்குச் சில ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.

ஆக்கிரமிப்பால் ஆத்ம திருப்தி கிடைக்குமா?

அடுத்தவரின் சொத்துகளை அபகரிப்பதுதான் அரச வீரமா?

பிறரின் உயிர்களைப் பலிகொடுத்து பெறும் வெற்றிதான் உண்மையான வீர வரலாறா?

அப்படிப்பட்ட வரலாறுகளையே நாம் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் "வீரகாவியம்" என்று கற்பிக்க வேண்டுமா?

எங்கே இன்று அந்த மாபெரும் பேரரசுகள்?

ஒருகாலத்தில் உலகையே ஆட்சி செய்த பேரரசுகள் இன்று வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே உள்ளன.

ஆம், இந்த மண்ணுலகில் வீழ்ச்சி அடையாத பேரரசு என்று எதுவும் இல்லை.

நிலைத்திருப்பது ஆக்கிரமிப்பு அல்ல; மனிதநேயம்.
நிலைத்திருப்பது வன்முறை அல்ல; அன்பு.
நிலைத்திருப்பது வெற்றி அல்ல; நீதியும் அமைதியும் மட்டுமே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 14:25