நெறி காட்டும் ஆளுமைகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
சாது வாச்வானியிடம் ஒரு நாள் பெரும் செல்வந்தர் ஒருவர் வந்தார். அவருடைய கையில் பணம் நிறைந்த ஒரு பெரிய பை இருந்தது. அதை சாது வாச்வானியிடம் கொடுத்து, "நீங்கள் சுயநலமற்றவர் என்று எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை வைத்து ஒரு ஆலயம் கட்டுங்கள். ஒரு வருடம் கழித்து வந்து அதைப் பார்க்கிறேன்," என்று கூறிவிட்டு சென்றார். அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சாது வாச்வானி, இறைவனின் முன்னிலையில் அமைதியாகச் செபித்து சிந்தித்தார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் முதல் அந்தப் பணத்தைக் கொண்டு பசியோடு வந்த ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், நோயால் வாடியவர்களுக்கும் தினமும் உணவு வழங்கத் தொடங்கினார். பசியாறிய மக்கள் நன்றியுடன் அவரை வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றனர். ஒரு வருடம் கழித்து, அந்தச் செல்வந்தர் மிகுந்த ஆவலுடன் வந்து, "நான் கொடுத்த பணத்தில் கட்டிய ஆலயம் எங்கே?" என்று கேட்டார். சாது வாச்வானி அவரை அழைத்துச் சென்று, "வாருங்கள். நீங்கள் கொடுத்த பணத்தில்தான் நான் ஆலயம் கட்டிக்கொண்டிருக்கிறேன்," என்று கூறினார். அவர் காட்டியது கற்களால் கட்டப்பட்ட கட்டடம் அல்ல. பசியால் வாடிய ஏழைகளின் நிறைவடைந்த வயிறுகளை.
அப்போது சாது வாச்வானி கூறினார்: "பசியால் எரியும் ஏழைகளின் வயிறுதான் இறைவனின் உண்மையான ஆலயம். அங்கேயே ஆண்டவர் உறைகிறார்." இதைக் கேட்ட அந்தச் செல்வந்தரின் மனம் உருகியது. அவர் இன்னொரு பை நிறைய பணத்தையும் கொண்டு வந்து சாது வாச்வானியிடம் ஒப்படைத்தார். அந்த நாளிலிருந்து அவரும் பிறருக்காக வாழத் தொடங்கினார். அந்த நிகழ்வில், ஆலயம் கட்டப் பணம் கொடுத்தவரும், ஆலயத்தை அன்பால் கட்டியவருமான சாது வாச்வானியும், தாங்களே இறைவன் வாழும் ஆலயங்களாக மாறினர். ஏனெனில், அவர்கள் பசியால் வாடியவர்களுக்கு உணவளித்து, இறைவனுக்கே பணிவிடை செய்தார்கள். இன்றும் உலகில் கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக குழந்தைகள், பசியால் வாடுகின்றனர். இந்நிலையில், கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து ஆலயங்களைக் கட்டுவது மட்டுமே இறைவனுக்குப் பிரியமான செயல் அல்ல. பசியால் வாடும் மனிதர்களின் வயிறு நிறைவடையச் செய்வதே இறைவனுக்குப் பிரியமான உண்மையான வழிபாடாகும்.
பசியால் வாடும் மனிதனின் வயிறே இறைவனின் ஆலயம். அந்த வயிறு நிறைவடையும் இடத்தில்தான் இறைவன் மகிழ்ச்சியோடு குடியிருக்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.