தேடுதல்

கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

தங்கம் நெருப்பில் புடம்போடப்பட்டால்தான் கசடுகள் நீங்கி ஒளிவீசும். அதுபோல, மனித வாழ்க்கையில் வரும் சோதனைகள் நம்மை அகந்தை, பொறாமை, கோபம், சுயநலம் போன்ற குறைகளிலிருந்து சுத்திகரிக்கின்றன. பரிசுத்தமான இதயத்தில் இறைவனின் முகமே பிரதிபலிக்கும். சோதனைகளைத் தவிர்க்காமல், அவற்றின் வழியாக இறையருளால் தூய்மையடைய அழைக்கப்படுகிறோம்.

புடம்போடப்படும் தங்கம்

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச

ஒரு பொற்கொல்லர் தகதகக்கும் நெருப்பில் தங்கத்தைப் புடம்போட்டுக் கொண்டிருந்தார். அவரின் அருகில் தொழிலைக் கற்றுக்கொண்டிருந்த மகன், கவனச் சிதைவின்றி அதைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஆர்வத்துடன் மகன் கேட்டான்: "அப்பா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அப்பா பதிலளித்தார்: "தங்கத்தை நெருப்பில் இட்டு சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன்."மகன் மீண்டும் கேட்டான்: "எவ்வளவு நேரம் நெருப்பில் வைத்திருக்க வேண்டும்?" அப்பா அமைதியாகச் சொன்னார்: "அது முழுமையாகச் சுத்தமாகும் வரை… பரிசுத்தமாகும் வரை." இந்தப் பதில் மகனைச் சிந்திக்க வைத்தது. சில நிமிடங்கள் கழித்து, தனது மனதில் எழுந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினான். "அப்பா, தங்கம் முழுவதும் சுத்தமாகிவிட்டது என்று எப்படி தெரிந்துகொள்வது? அதற்கான அளவுகோல் என்ன? "பொற்கொல்லர் தன் வேலையைச் சிறிது நேரம் நிறுத்திவிட்டு, மகனைப் பார்த்து புன்னகையுடன் கூறினார்:"மகனே, தங்கத்தை நெருப்பில் வைத்துக்கொண்டே இரு. அதிலுள்ள கசடுகள் அனைத்தும் கரையும். பிறகு அதை உன்னிப்பாகப் பார். மெல்ல மெல்ல அதில் உன் முகம் பிரதிபலிக்கத் தொடங்கும். எப்போது உன் முகம் தெளிவாகத் தெரிகிறதோ, அப்போது அந்தத் தங்கம் முழுமையாகச் சுத்தமாகிவிட்டது என்று அர்த்தம். அதுதான் அதற்கான அளவுகோல்."

மகன் வாழ்க்கைக்கான மிகப்பெரிய பாடத்தை அன்றே கற்றுக்கொண்டான். புடம்போடப்படாத தங்கம் மகுடம் ஏறாது.
நெருப்பின்றி தங்கத்தின் கசடுகள் கரையாது.
கசடுகள் கரையாமல் அது பரிசுத்தமாகாது.
பரிசுத்தமாகாத தங்கம் உன் முகத்தையும் தெளிவாகக் காட்டாது.

அதேபோல, மனித வாழ்க்கையிலும் சோதனைகள் நம்மைச் சுத்திகரிக்கின்றன. மனதில் இருக்கும் அகந்தை, பொறாமை, கோபம், சுயநலம் போன்ற கசடுகள் இறையருளின் நெருப்பில் கரையும்போதுதான், நம் உள்ளம் பரிசுத்தமடைகிறது. பரிசுத்தமான இதயம் இறைவனின் முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறுகிறது. கண்ணாடி யாரையும் பாகுபடுத்தாது. அதன் முன் நிற்பவர் யாராக இருந்தாலும், அவர்களின் முகத்தையே காட்டும். அதுபோல, இறைவனும் மனிதரைப் பாகுபடுத்துவதில்லை. பாவியாயினும், புண்ணியவனாயினும், மனம் திரும்பி அவரை அணுகுபவர்களை அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். ஆன்மாவின் அகத்தூய்மையும், ஆண்டவரின் பரிசுத்தமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பவை. நம் இதயம் தூய்மையடையும்போது, அதில் பிரதிபலிப்பது நம் முகமல்ல, இறைவனின் முகமே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூலை 2026, 10:30