கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

சில்லறை இலாபங்களைத் தேடி அலைந்தால், வாழ்க்கையின் பெரும் பொக்கிஷங்களை இழக்க நேரிடும். நிமிர்ந்த பார்வையுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்தால்தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

நிமிர்ந்து நடக்க மறந்த மனிதன்

நிமிர்ந்த நடை... நேர்கொண்ட பார்வை... உயரமான, கம்பீரமான, வலிமைமிக்க, கவர்ச்சிகரமான உடலமைப்பு... அந்த இளைஞனைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டினர். பலர் அவனுக்கு உயர்ந்த பதவிகளையும் வழங்க முன்வந்தனர். அவனோ நிமிர்ந்து நடந்து உலகின் அழகை ரசித்தான். இரவில் விண்ணில் மின்னும் விண்மீன்களைப் பார்த்து வியந்தான். நேர்கொண்ட பார்வையின் இன்பத்தை அனுபவித்தான். ஒருநாள், தெருவில் தலைகுனிந்து நடந்தபோது அவன் காலடியில் ஒரு சிறிய நாணயம் கிடந்தது. உடனே அதை எடுத்தான். "குனிந்து நடந்தால் காசு கிடைக்கிறது!" என்று மகிழ்ந்தான்.அன்றிலிருந்து அவன் எப்போதும் தலைகுனிந்தே நடக்கத் தொடங்கினான். தெருவுக்குத் தெரு, பாதைக்குப் பாதை, ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டே சென்றான். சில நேரங்களில் நாணயங்கள் கிடைத்தன; சில நேரங்களில் பட்டன்கள், கோழிக்குண்டுகள், சிறு பொருட்கள் கிடைத்தன. கிடைத்த அனைத்தையும் சேமித்து வைத்தான்.

ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அவன் சேமித்த அனைத்தையும் எண்ணிப் பார்த்தான். ஆயிரக்கணக்கான பட்டன்கள், எண்ணற்ற கோழிக்குண்டுகள், சில பழைய நாணயங்கள்... அவ்வளவுதான். வாழ்நாள் முழுவதும் தேடியது இவ்வளவுதானா? என்று அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அப்போதுதான் அவன் நிமிர்ந்து நடக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. பல ஆண்டுகள் குனிந்து நடந்ததால் அவன் உடல் வளைந்துவிட்டது. வானத்தைப் பார்க்க முடியவில்லை. விண்மீன்களை ரசிக்க முடியவில்லை. நேர்கொண்ட பார்வையையும் நிமிர்ந்த நடையையும் இழந்துவிட்டான். அப்போது அவன் "ஐயோ! சில்லறை நாணயங்களைத் தேடித் தேடி, வாழ்க்கையின் பெரும் பொக்கிஷங்களை இழந்துவிட்டேனே!" என்று கதறினான்:

சிந்தனை:

சிறுசிறு பொருட்களைத் தேடி வாழ்நாளைச் செலவிடுபவன், வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்களை இழக்கிறான். பொருட்களைக் குவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால், வாழ்க்கையின் பொருளை இழந்துவிடுவோம். சில்லறை செயல்களில் கவனத்தைச் சிதறவிடுபவரால் சிகரங்களை எட்ட முடியாது. நிமிர்ந்த பார்வையுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடப்பவரே வாழ்க்கையின் உண்மையான வெற்றியாளர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூலை 2026, 13:14