கதைகள் ஆயிரம்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
முன்னொரு காலத்தில், ஒரு நரி முதன்முறையாக ஒரு சேவலைப் பார்த்தது. சேவலைக் கண்டதும் அது பயந்து போனது. "அய்யய்யோ! தலையில் நெருப்பைக் கட்டிக்கொண்டு ஒரு கொடிய விலங்கு உலா வருகிறதே! தொண்டையைக் கிழித்துக் கதறுகிறதே! அதோடு பறக்கவும் செய்கிறதே!" என்று எண்ணியது. அதன்பிறகு, சேவலைப் பார்த்த போதெல்லாம் நரி பயந்து நடுங்கி, ஓடி ஓடி ஒளிந்துகொண்டது. இதைக் கவனித்த சேவல், நட்புணர்வோடு நரியிடம் கேட்டது:"நண்பா! என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் இப்படி ஓடி ஒளிகிறாய்? பயப்படாதே... பக்கத்தில் வா." ஆனால், தூரத்திலிருந்தபடியே நடுங்கிக் கொண்டிருந்த நரி, "நோ... நோ... நோ... சான்ஸே இல்லை! தலையில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலைபவன் நீ. உன் அருகில் வந்தால் என்னையும் பற்றவைத்து விடுவாய்!" என்றது. அதற்கு சேவல் அமைதியாக, "நண்பா! அது நெருப்பு அல்ல. என் சிவந்த கொண்டைதான். அருகே வா. தொட்டுப் பார். பயப்படாதே... அது உன்னைச் சுடாது." என்றது. சிறிது தயக்கத்துடன் நரி அருகில் வந்தது. அந்தச் சிவந்த கொண்டையைத் தொட்டுப் பார்த்தது. கோதிப் பார்த்தது. உண்மையை உணர்ந்தது. "ஆமாம்... இது நெருப்பில்லை. வெறும் சிவப்பு நிறச் சதைதான்!" என்று புரிந்துகொண்டது. அடுத்த கணமே, நரி சேவலின் கழுத்தைக் கவ்வியது. சிறகடித்தபடி உயிருடன் போராடிய சேவலால் தப்பிக்க முடியவில்லை. மரண வேதனையில் அது வருந்தியபடி கூறியதாகச் சொல்கிறார்கள்: "ஐயோ! என்னுடைய பலத்தையே நானே பலவீனமாக்கிவிட்டேனே!"
சிந்தனை
ஆழம் தெரிந்து காலை விடு; அகலம் தெரிந்து ஆணையிடு.
துரோகத்தை மறந்துவிடலாம்; ஆனால் நம்பிக்கைத் துரோகம் ஆறாத காயத்தை ஏற்படுத்தும்.
உன் பலவீனத்தை நண்பரிடம் சொல்; உன் பலத்தை எதிரியிடம் சொல்; இரண்டையும் இறைவனிடம் சொல்.
காலம் கடந்தாலும் எதிரியை மன்னிக்கலாம்; ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்பவனை மீண்டும் நம்புவதில் எச்சரிக்கையாக இரு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.