தேடுதல்

2026.07.24 hungry kids

உலகில் இன்னும் 64.5 கோடி மக்கள் பசியால் பாதிப்பு: ஐ.நா. SOFI 2025 அறிக்கை

ஐ.நா. அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள 'உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை – 2025' (SOFI 2025) அறிக்கையின்படி, உலகளவில் பசியின் அளவு ஓரளவு குறைந்திருந்தாலும், இன்னும் 64.5 கோடி மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP), உலக நலவாழ்வு அமைப்பு (WHO), யுனிசெஃப் (UNICEF), மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான பன்னாட்டு நிதியம் (IFAD) ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள 'உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை – 2025' (SOFI 2025) அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 7.8 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ 64.5 கோடி மக்கள், பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டை விட 1.4 கோடி பேரும், பசியின் தாக்கம் அதிகமாக இருந்த 2022ஆம் ஆண்டை விட 4.3 கோடி பேரும் குறைவாக பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப் பிட்டுள்ள அதன் அறிக்கை, தென் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் உணவுப் பாதுகாப்பு கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய முன்னேற்றம் காணப்பட்டாலும், புவிசார் அரசியல் மோதல்கள், ஹார்முஸ் நீரிணை போன்ற வர்த்தக வழிகளில் ஏற்படும் இடையூறுகள், மற்றும் வலுவான எல் நினோ (El Niño) உள்ளிட்ட காலநிலை தொடர்பான அச்சுறுத்தல்கள், உணவு உற்பத்திச் செலவுகளை அதிகரிப்பதன் மூலமும் விவசாயத்தைச் சீர்குலைப்பதன் மூலமும் நிலைமையைத் தலைகீழாக மாற்றக்கூடும் என்று ஐ.நா அமைப்புகள் எச்சரித்துள்ளன.

2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் பசியின் அளவு குறைந்திருந்தாலும், அங்குள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் அதாவது 30.9 கோடிப் பேர் இன்னும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதன் அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தை உற்றுநோக்கினால், 2030 ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ 52 கோடி மக்கள் இன்னும் பசியை எதிர்கொள்ளக்கூடும், இது ஐநாவின் இரண்டாவது நிலையான வளர்ச்சி இலக்கான "பசியில்லா உலகம்" என்னும் இலக்கை அடைவதை தடுக்கிறது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்களிடையே இரத்த சோகை மற்றும் பெரியவர்களின் உடல் பருமன் ஆகியவை உலகளாவிய முக்கிய கவலைகளாகத் தொடர்கின்றன என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அனைவருக்கும் அனைவராலும் வாங்கக்கூடிய, ஊட்டச்சத்து மிக்க உணவை உறுதி செய்வதற்காக, மீள்தன்மை கொண்ட உணவு முறைகளில் முதலீடு செய்யவும், விவசாயிகளுக்கு முக்கிய விவசாய இடுபொருட்களை வழங்கி ஆதரவளிக்கவும், மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தவும் அரசுகளை ஐ.நா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஜூலை 2026, 13:31