தேடுதல்

மத்திய காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனச் சிறுவன் மத்திய காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனச் சிறுவன் 

காசா மோதலின் கடுமையான விளைவுகளை தொடர்ந்து எதிர்கொள்ளும் பொதுமக்கள்

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகள் குறித்து ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

காசா முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரமடைந்துள்ளன, இதனால் பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று காசா நலவாழ்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் வன்முறை தொடர்வதால், அதன் பிறகு 1,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தின் மாறிவரும் கட்டுப்பாட்டு எல்லையான "மஞ்சள் கோட்டிற்கு" வெகு தொலைவில் பலர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கீதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூலை 13 முதல் 20 வரை ஆறு குழந்தைகள் மற்றும் எட்டு பெண்கள் உள்பட குறைந்தது 57 பாலஸ்தீனியர்களின் இறப்புகளை ஐ.நா. ஆவணப்படுத்தியுள்ளதாக  குறிப்பிட்ட  அவர், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 34 பேர் இஸ்ரேல் விதித்த கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உயிரிழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காடியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு அக்டோபர்  முதல் 2026 ஏப்ரல் நடுப்பகுதி வரை காசா முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் 283 பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததையும் ஐ.நா. சரிபார்ப்புக் குழுக்கள் (UN Verification Missions) உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகளுக்கு மத்தியில் கருச்சிதைவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக காசாவில் உள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4,000 கருச்சிதைவுகள் பதிவாகியுள்ளதாக காசாவில் உள்ள மருத்துவ நிவாரண இயக்குநர் பாஸம் ஜாக்வுட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த சாலைகளில் நெரிசலான வாகனங்களில் கர்ப்பிணிப் பெண்கள் பயணிப்பது, குண்டுவீச்சு குறித்த தொடர்ச்சியான பயம், தரையில் தூங்குவது, வெந்நீர், நலவாழ்வுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள சிரமம், அத்துடன் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள சுகாதாரமற்ற நிலைமைகள் போன்ற கடுமையான வாழ்க்கைச் சூழல்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஜூலை 2026, 13:22