ஆன்றோர் வாக்கு ஆன்றோர் வாக்கு  (©andror vakku 29)

ஆன்றோர் வாக்கு

ஒவ்வொரு மனிதரும் இறைவனின் தனித்துவமான படைப்பு; ஒருவரையும் மற்றொருவரோடு ஒப்பிட முடியாது. வேற்றுமையை ஏற்றுக்கொள்வதே ஒற்றுமையின் அடித்தளம்; அதுவே அன்பான சமுதாயத்தை உருவாக்கும்.

மேதகு ஆயர் சிங்கராயன்

வேற்றுமையில் ஒற்றுமை

அன்பிற்கினியவர்களே,

நாம் கண்களைத் திறந்து இயற்கையைப் பார்க்கும்போது, எத்தனை விதவிதமான படைப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு மரங்களோ, இரண்டு பாறைகளோ, இரண்டு மலர்களோ கூட முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.

மனிதர்களும் அப்படித்தான். எல்லோரும் மனிதர்கள் என்ற ஒரே இயல்பைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தனித்துவம் வாய்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இருப்பினும், இந்த வேற்றுமையை ஏற்றுக்கொள்வது நமக்கு பல நேரங்களில் கடினமாக இருக்கிறது. "எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும், ஒரே மாதிரி செயல்பட வேண்டும், ஒரே மாதிரி வாழ வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு நமது சமுதாயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைக் குறித்து அறிஞர் அரிஸ்டாட்டில் லுட்விக் கூறும் ஒரு சிந்தனை மிகவும் அழகானது:

"Nature made man and then broke the mould."
"இயற்கை மனிதனை உருவாக்கி, அதன் பிறகு அந்த அச்சு வார்ப்பை உடைத்துவிட்டது."

ஒரு சிலையை உருவாக்கும்போது முதலில் அதற்கான அச்சு வார்ப்பு தயாரிக்கப்படுகிறது. அதில் பொருள் ஊற்றப்பட்டு சிலை உருவான பிறகு, அதே அச்சைப் பயன்படுத்தி மீண்டும் அதே மாதிரியான சிலைகளை உருவாக்க முடியும். ஆனால் இயற்கை மனிதனை அப்படிப் படைப்பதில்லை. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கிய பிறகு, அந்த அச்சு வார்ப்பை உடைத்துவிடுகிறது. அதனால்தான் உலகில் இரண்டு மனிதர்களும் முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் இறைவனின் தனித்துவமான படைப்பே. இந்த உண்மையை நாம் குடும்பத்திலும், சமூகத்திலும், பணியிடங்களிலும், நாம் வாழும் ஒவ்வொரு சூழலிலும் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும், ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும், ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.

மாறாக, ஒவ்வொருவரின் தனித்தன்மையை மதிக்க வேண்டும். அவர்களின் திறமைகளைப் பாராட்ட வேண்டும். அவர்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த வேற்றுமைகள்தான் நம்மை வளப்படுத்துகின்றன; அந்தப் பல்வகைத் தன்மையே சமுதாயத்தை அழகாக்குகிறது. எனவே, "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற உயரிய உண்மையை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம். ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் மதித்து, அன்போடும் ஒற்றுமையோடும் வாழ முயற்சிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூலை 2026, 13:59