தேடுதல்

2026.07.22 Andror Vakku 22

ஆன்றோர் வாக்கு

இந்த உலகின் செல்வம், புகழ், அதிகாரம் அனைத்தும் நிலையற்றவை; நிலையானது இறைவனில் வாழும் வாழ்க்கை மட்டுமே. எனவே, நிலையற்றவற்றில் பற்றுக் கொள்ளாமல், அன்பு, தாழ்மை, நன்மை ஆகிய ஆன்மீகச் செல்வங்களைத் தேடி வாழ்வோம்.

மேதகு ஆயர் சிங்கராயன்

அன்பு சகோதரர், சகோதரிகளே!

ஆன்றோர் வாக்கு என்ற தொடரில் இன்று நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய ஓர் ஆழமான சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆங்கில எழுத்தாளரான அலெக்சாண்டர் வில்லியம் மனித வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி சிந்திக்க வைக்கும் வகையில் இவ்வாறு கூறுகிறார்:

  • “Those golden palaces, those gorgeous halls, those stately courts,
  • those kind-encountering walls vanish all like vapour in the air.”

"தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகள், ஆடம்பரமான மண்டபங்கள், பிரம்மாண்டமான அரங்குகள், விண்ணை முட்டும் உறுதியான சுவர்கள் – இவை அனைத்தும் ஒருநாள் காற்றில் கரைந்துபோகும் நீராவியைப் போல மறைந்துவிடும்."

இந்த வார்த்தைகள் ஒரு முக்கியமான உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த உலகில் எதுவும் நிலையானதல்ல. இன்று நமக்குச் சொந்தமாக இருப்பதாக நாம் நினைக்கும் செல்வம், பதவி, புகழ், அதிகாரம், வசதிகள் அனைத்தும் ஒருநாள் நம்மைவிட்டு நீங்கிவிடும். ஆனால் பல நேரங்களில், இவை எப்போதும் நம்முடனேயே இருக்கும் என்ற தவறான எண்ணத்தில் நாம் வாழ்கிறோம். அதனால்தான் நிலையற்றவற்றிற்காக அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதையும், இந்த உலகின் அனைத்தும் நிலையற்றவை என்பதையும் நாம் உணர்ந்தால், நமது வாழ்க்கை முறையே மாறும். பிறருக்கு நன்மை செய்வோம். அன்போடும், தாழ்மையோடும் வாழ்வோம். நிலையான வாழ்விற்குத் தேவையான ஆன்மீகச் செல்வங்களைத் தேடுவோம். எனவே, நிலையற்றவற்றில் பற்றுக் கொள்ளாமல், நிலையானவற்றை நோக்கி நம் வாழ்வைப் பயணிக்க முயற்சி செய்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூலை 2026, 14:46