ஆன்றோர் வாக்கு
மேதகு ஆயர் சிங்கராயன்
அன்பிற்குரியவர்களே,
ஆன்றோர் வாக்கு என்ற இந்த சிந்தனைத் தொடரில், இன்று ஆங்கில எழுத்தாளர் ஆர்னால்ட் மேத்தியூ கூறிய ஒரு ஆழமான கருத்தைப் பற்றி சிந்திக்கப் போகிறோம். அவர் கூறுகிறார்:
"Truth is upon the lips of dying men."
"இறந்து கொண்டிருக்கும் மனிதனின் வாயில்தான் உண்மை குடிகொண்டிருக்கிறது."
இந்த வார்த்தைகள் நமக்கு என்ன சொல்கின்றன? இந்த உலகில் வாழும் காலத்தில், பல நேரங்களில் மனிதன் உண்மையைப் பேசத் தயங்குகிறான். உண்மையை மறைத்து, சாக்குப்போக்குகளையும் பொய்களையும் கூறியே வாழ முயல்கிறான். ஆனால் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை அடையும்போது, அல்லது வேறு வழியில்லாத ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, அவன் உண்மையை வெளிப்படுத்துகிறான். இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு குற்றவாளிகள். முதலில் காவல்துறையினர் விசாரிக்கும்போது அவர்கள் உண்மையை மறுக்கிறார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களை நெருக்கும்போது, இறுதியில் உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள். நண்பர்களே, மனிதன் இறக்கும் தருவாயில்தான் உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. மனிதன் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். அதிலும் உண்மையின் அடிப்படையில் வாழ்வதற்கே இறைவன் அவனை அழைத்திருக்கிறார். நாம் வாழ்நாள் முழுவதும் உண்மையைப் பேசி வாழ்ந்தால், அது நமக்கும் நன்மை தரும்; நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும். எனவே, வாழ்க்கையின் இறுதியில் உண்மையை ஒப்புக்கொள்ளும் மனிதர்களாக அல்லாமல், ஆரம்பத்திலிருந்தே உண்மையைப் பேசி வாழும் மனிதர்களாக இருப்போம்.
முயன்று பார்ப்போமா?
நன்றி. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.