தேடுதல்

ஆன்றோர் வாக்கு ஆன்றோர் வாக்கு 

ஆன்றோர் வாக்கு

நாம் செய்யும் சிறிய நற்செயல்கள் நமக்குச் சாதாரணமாகத் தோன்றலாம்; ஆனால் அவை மற்றொருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒவ்வொரு செயலையும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்து, நம்பிக்கையை விதைப்பவர்களாக வாழ்வோம்.

மேதகு ஆயர் சிங்கராயன்

அன்பிற்கினியவர்களே! இன்றைய சிந்தனையில் உங்களை விண்வெளிக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். 1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நடந்தது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முறையாக கால்பதித்தார். மனிதகுலத்தின் வரலாற்றில் அது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய நாள். பின்னர், அவர் பூமிக்குத் திரும்பி வந்தபோது, ஒருவர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்:

"நிலவில் முதல் அடியை எடுத்து வைத்தபோது உங்களுக்கு எப்படி இருந்தது?"

அதற்கு நீல் ஆம்ஸ்ட்ராங் அளித்த பதில் மிகவும் சிந்திக்க வைக்கிறது. அவர் கூறினார்:

"ஒரு மனிதனாக நான் ஒரு சாதாரண அடியை எடுத்து வைத்தேன். ஆனால் மனிதகுலத்திற்கு அது ஒரு மாபெரும் முன்னேற்றமாக இருந்தது."

உண்மையில், அவருக்கு அது ஒரு சாதாரண நடைபோலத் தோன்றியிருக்கலாம். ஆனால் உலக வரலாற்றைப் பொறுத்தவரை, மனிதன் முதன்முறையாக நிலவில் கால்பதித்த அந்தத் தருணம், இதுவரை இல்லாத ஒரு சாதனையைப் படைத்த வரலாற்று நிகழ்வாக மாறியது.

அன்பானவர்களே, நமது வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந்துகிறது.

நாம் செய்யும் பல செயல்கள் நமக்குச் சாதாரணமாகத் தோன்றலாம். "இதில் என்ன பெரிய விஷயம்?" என்று கூட நாம் நினைக்கலாம். ஆனால் அதே செயல், மற்றொருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அது அவருக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், புதிய தொடக்கத்தையும் தரக்கூடும். எனவே, சிறிய செயல்களை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஒரு புன்னகை, ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு சிறிய உதவி, ஒரு ஊக்கமளிக்கும் செயல்—இவை அனைத்தும் மற்றவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் வைத்த அந்த ஒரு அடி, அவருக்குச் சாதாரணமாக இருந்தாலும், மனிதகுலத்திற்கு வரலாற்றை மாற்றிய ஒரு மாபெரும் அடியாக அமைந்தது. அதுபோல, நம் வாழ்விலும் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலையும் அன்போடும், பொறுப்போடும், அர்ப்பணிப்போடும் செய்வோம். ஏனெனில், இன்று நாம் சிறியதாக நினைக்கும் செயல், நாளை யாரோ ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடும்.

ஆண்டவர் நம்மை அத்தகைய நன்மை செய்யும் கருவிகளாக மாற்றுவாராக!

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஜூலை 2026, 13:03