2026.06.13 Rosary

இத்தாலியில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர் முறை

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட யுனிசெஃப் அறிக்கை, இத்தாலியில் 15 முதல் 17 வயதுடைய பணிபுரியும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 12, வெள்ளியன்று இத்தாலி நாட்டின் யுனிசெஃப் அமைப்பு தனது 4-வது புள்ளியியல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “இத்தாலியில் குழந்தை தொழிலாளர்: ஆபத்துகள், விபத்துகள் மற்றும் பணியிட பாதுகாப்பு” என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2020 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட பணிபுரியும் சிறார்களின் எண்ணிக்கை 35,505-லிருந்து 81,565 ஆக அதாவது இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. 19 வயதுக்குட்பட்டவர்களின் வேலைவாய்ப்பு 37.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 2021-இல் 310,400 ஆக இருந்த நிலையில், 2024-இல் 427,072 ஆக உயர்ந்துள்ளது. சிறார்களை வேலைக்கு அமர்த்தும் முக்கியத் துறைகளாக கூலி வேலை மற்றும் விவசாயம் ஆகியவை உள்ளன.

இந்த அறிக்கை பணியிட பாதுகாப்பு குறித்த கவலைக்குரிய புள்ளிவிவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் 15 முதல் 17 வயதுடைய குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்புடைய விபத்துகளின் எண்ணிக்கை 18,617 ஆக பதிவாகியுள்ள நிலையில், அந்த ஆண்டில் ஏழு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

2020 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையே, பணியிட விபத்துகளில் 15 முதல் 17 வயதுடைய சிறார்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

லோம்பார்டி பகுதியில் அதிக எண்ணிக்கையிலான இளம் தொழிலாளர்கள் உள்ளனர்" என்றும்,  வெனெட்டோ, எமிலியா-ரோமக்னா, லாசியோ மற்றும் புக்லியா ஆகிய பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தை தொழிலாளர் முறையின் அதிக பாதிப்பு ட்ரென்டினோ-ஆல்டோ அடிஜே மற்றும் வேல் டி ஓஸ்டா ஆகிய பகுதிகளில் காணப்படுவதாகவும் யுனிசெஃபின் புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தான் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு பெற உரிமை உண்டு என்று இத்தாலி நாட்டின் யுனிசெஃப் தலைவர் நிக்கோலா கிராசியானோ வலியுறுத்தியுள்ளார். "இது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையின் 32-வது பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று கூறிய அவர், " வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள், மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் இளம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைக் காக்க கூடுதல் பாதுகாப்பு தேவை" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூன் 2026, 11:48