தேடுதல்

லெபனான் லெபனான் 

லெபனோனில் 100 நாட்களில் 247 குழந்தைகள் உயிரிழப்பு!

லெபனோனில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல்களில் குறைந்தது 247 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 992 பேர் காயமடைந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

லெபனோனில் இந்த ஆண்டு மார்ச் 2 அன்று தொடங்கி 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தீவிர மோதல்களால் குறைந்தது 247 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 992 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 17, புதனன்று, வெளியிடப்பட்ட அறிக்கையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ள  லெபனோனின் யுனிசெஃப் பிரதிநிதி மார்கோலூயிகி கோர்சி அவர்கள், தற்போதைய மோதலுக்கு குழந்தைகள் பேரழிவை ஏற்படுத்தும் விலையைக் கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

"போர் தீவிரமடைந்ததில் இருந்து, லெபனோன் முழுவதும் உள்ள குழந்தைகள் மீண்டும் மீண்டும் இடம்பெயர்தல், வன்முறைக்கு உள்ளாகுதல், அன்புக்குரியவர்களை இழத்தல், மற்றும் தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் சமூகங்கள் அழிக்கப்படுதல் ஆகிய அச்சமூட்டும் சூழலை எதிர்கொள்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்தப் புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் மட்டுமல்ல, சிதைந்த வாழ்க்கையையும், ஆழ்ந்த அதிர்ச்சியையும், எண்ணற்ற குடும்பங்களின் நிச்சயமற்ற தன்மையையும் பிரதிபலிக்கின்றன" என்று  வலியுறுத்தியுள்ள கோர்சி அவர்கள், ஒரு முழு தலைமுறை குழந்தைகளின் குழந்தைப்பருவம் சீர்குலைந்துள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு உணர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

மேலும் "மோதலின் போது தினமும் சராசரியாக 12 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் அல்லது உடல் உறுப்புகளை இழக்கின்றனர் என்று யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"வீடுகள், பள்ளிகள், நீர் அமைப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை பாதிக்கும் பரவலான அழிவுகளுடன் மனிதாபிமான நிலையும் மிகவும் மோசமாக உள்ளது" என்றும் "வன்முறை, இடம்பெயர்வு மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்ததால் 7,70,000-க்கும் அதிகமான குழந்தைகள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்" என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

மேலும் "தொடர்ந்து இடம்பெறும் சண்டைகள் மற்றும் இன்னும் வெடிக்காத வெடிபொருட்களின் அச்சுறுத்தல் காரணமாக பலர் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கல்வி, நலவாழ்வு மற்றும் பிற அடிப்படை சேவைகளுக்கான அணுகலை மீட்டெடுக்க வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், நீண்டகால போர் நிறுத்தம், குழந்தைகள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளைப் பாதுகாத்தல், தடையற்ற மனிதாபிமான அணுகலை ஏற்படுத்துதல் மற்றும் அனைத்துலக சட்டத்திற்கு முழு மரியாதை அளித்தல் ஆகியவற்றுக்கான தனது அழைப்பை மீண்டும் புதுப்பித்துள்ளது.

லெபனானின் குழந்தைகள் இந்த நெருக்கடியிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமல்லாமல், தங்கள் எதிர்காலத்தை மீட்டெடுக்கவும் மீண்டும் கட்டமைக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்துலக அரசுகளை யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூன் 2026, 10:34