போர்நிறுத்தத்திற்குப் பின்னரும் காசாவில் 265 குழந்தைகள் பலி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 265 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம் காசாவில் குழந்தைகள் தொடர்ந்து கொல்லப்படுவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.
"இந்தக் குழந்தைகளில் பலர் போர்க்களங்களில் கொல்லப்படவில்லை" என்றும் "மாறாக அவர்களது வீடுகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்" என்றும் யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
"தினமும் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் போது, போர்நிறுத்தத்தை அர்த்தமுள்ளதாக கருத முடியாது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் இரண்டு வயது, 13 வயது மற்றும் ஐந்து வயது குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடரும் வன்முறை குழந்தைகளிடையே ஆழ்ந்த உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது அவர்களின் உணவு, தூக்கம், கற்றல் மற்றும் இயல்பான வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
காயமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான அணுகல் அவசரமாக தேவைப்படுவதையும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய யுனிசெஃப், அனைத்துலக சட்டத்தை நிலைநாட்டவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கவும் அரசுகளையும் அனைத்துலக நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் தொடர்ந்து கொல்லப்பட்டும் காயமடைந்தும் வரும் சூழல் நிலவும் வரை எந்தவொரு போர்நிறுத்தத்தையும் வெற்றிகரமாக கருத முடியாது என்றும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.