குழந்தைத் தொழிலாளர் குழந்தைத் தொழிலாளர்  

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அழைப்பு விடுத்த சேவ் தி சில்ட்ரன் அமைப்பு!

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பன்னாட்டு தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் தொடர்ந்து தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாகி வருவதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. குழந்தைகளின் கல்வி, நல்வாழ்வு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க வறுமை ஒழிப்பு, கல்வி ஆதரவு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பன்னாட்டு தினத்தை முன்னிட்டு, உலகின் பல பகுதிகளில் குழந்தைகள் தொடர்ந்து தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாகி வருவதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைகளின் உடல், மன மற்றும் கல்வி வளர்ச்சியை பாதிப்பதோடு, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு கடுமையான பிரச்சினையாகும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“இது ஒரு விளையாட்டு அல்ல” என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, இத்தாலியில் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 6.8 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ  15 பேரில் ஒருவர், கடந்த ஆண்டில் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, 14 முதல் 15 வயதுடையவர்களிடையே இந்த விகிதம் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், 27.8 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ 58,000 இளம் பருவத்தினர், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது. உணவு தயாரிப்பு, சில்லறை வணிகம், விவசாயம், கட்டுமானம் மற்றும் இணையதளப் பணிகள் ஆகியவை அதிகளவில் சிறார்கள் ஈடுபடும் துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, 15 முதல் 16 வயதுடைய இளம் பருவத்தினரில் 43.7 விழுக்காட்டினர் தங்கள் குடும்பங்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலை செய்துள்ளனர்.

இளம் வயதிலேயே வேலைக்குச் செல்வது, பள்ளிப் படிப்பை இடைநிறுத்துதல், குறைந்த ஊதிய வேலைகளில் சிக்கிக்கொள்ளுதல் மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற ஆபத்துகளை அதிகரிக்கிறது என்று எச்சரித்துள்ள சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டு முதல் ராகுசா நகரில் செயல்பட்டு வரும் “மறைந்திருப்பதிலிருந்து விடுதலை” என்ற திட்டத்தின் மூலம், 356 சிறார்கள் உட்பட 665 பேருக்கு சேவ் தி சில்ட்ரன் அமைப்பு உதவியளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூன் 2026, 11:42