ஐரோப்பாவின் எண்ணிம எதிர்காலத்திலும் வானொலியின் முக்கியத்துவம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
"செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ணிம தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் அபரிமிதமாக இருந்தபோதிலும், ஐரோப்பிய குடிமக்களுக்கு வானொலி மிகவும் நம்பகமான தகவல் தொடர்பு கருவியாக தொடர்ந்து செயலாற்றி வருகிறது" என்று அலெஸாண்ட்ரோ ஜிசோட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் ஊடகத்தின் துணை இயக்குநரும், ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்திற்கான (EBU) வத்திக்கான் வானொலியின் பிரதிநிதியுமான அலெஸாண்ட்ரோ ஜிசோட்டி அவர்கள், வத்திக்கான் வானொலியின் சவுண்ட் இதழுக்கு (Sound Magazine) அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2027-இல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணிம வலையமைப்பு சட்டத்தின் (DNA) முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜிசோட்டி அவர்கள், " இந்தச் சட்டம் எண்ணிம தகவல் தொடர்புகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் "எதிர்காலத்தில் குடிமக்கள் செய்திகளையும் தகவல்களையும் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை இச்சட்டம் தீர்மானிக்கும்" என்றும் கூறியுள்ளார்.
"மகிழுந்துகளில் வானொலி தொடர்ந்து அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வது ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் முக்கிய கவலையாக உள்ளதாகத் தெரிவித்த ஜிசோட்டி அவர்கள், "ரேடியோ ரெடி" (Radio Ready) என்னும் முன்னெடுப்பின் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து புதிய மகிழுந்துகளிலும் எஃப்எம் (FM) மற்றும் டிஏபி/டிஏபி+ (DAB/DAB+) ஆகிய தொழில்நுட்பங்களை பயண்படுத்தும் தரைவழி வானொலி ஏற்பிகள் இருக்க வேண்டும் என்று சட்டமியற்றுபவர்களை ஒளிபரப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் வானொலி கேட்கும் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் மகிழுந்தில் வானொலியைப் பயன்படுத்துவதால், பொதுத் தகவல், சாலை பாதுகாப்பு மற்றும் அவசரக்காலத் தொடர்புகளுக்கு வானொலி அணுகலைத் தக்கவைப்பது அவசியம் என்று ஒளிபரப்பாளர்கள் வாதிடுகின்றனர் என்றும் ஜிசோட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வானொலி என்பது ஒரு உலகளாவிய, இலவச மற்றும் நம்பகமான ஊடகமாகவே நீடிக்கிறது என்று வலியுறுத்திய ஜிசோட்டி அவர்கள், இது நெருக்கடி காலங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், ஊடக பன்முகத்தன்மையை ஆதரித்து ஜனநாயக சமூகங்களை வலுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காரணங்களுக்காக, ஐரோப்பாவின் எண்ணிம எதிர்காலத்தில் வானொலியின் இடத்தைப் பாதுகாக்க எண்ணிம வலையமைப்பு சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிசோட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்