தேடுதல்

சிறைவாசிகள், லூப்லின் இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றனர். சிறைவாசிகள், லூப்லின் இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றனர்.  

சிறைவாசிகளுக்கு ஒரு புதிய வாழ்வை அளிக்கும் சிறைச்சாலை கல்வித் திட்டம்!

போலந்தின் லூப்லின் சிறையில் ஏழு கைதிகள், லூப்லின் இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்க பல்கலைக்கழகம் வழங்கிய கல்வித் திட்டத்தின் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றனர். கல்வி கைதிகளின் மறுவாழ்வுக்கு பயனுள்ள வழிமுறையாக இருப்பதாக பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளதுடன், இந்த முயற்சி அனைத்துலக கவனத்தை ஈர்த்து, உரோமிலும் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்  

போலந்தின் லூப்லினில் உள்ள ஒரு சிறையில் ஏழு கைதிகள், லூப்லினின் இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்க பல்கலைக்கழகம் (KUL) வழங்கும் தனித்துவமான கல்வித் திட்டத்தின் மூலம் தங்கள் இளங்கலை பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். ஜூன் 24, புதனன்று அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தேர்வுக்குப் பிறகு தங்கள் இளங்கலை ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்து, சவாலான கேள்விகளுக்குப் பதிலளித்து, குடும்ப ஆய்வுத் துறையில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

வெவ்வேறு வாழ்க்கைக் கதைகள் மற்றும் சிறைத்தண்டனைகளைக் கொண்ட பட்டம் பெற்றவர்கள், சிறைத் தண்டனையை அனுபவிக்கும் போது படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர். தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஒரு கைதி, பட்டப்படிப்பை முடித்தது தனக்கு பெருமையையும் நம்பிக்கையையும் அளிப்பதாகவும், சிறையிலேயே முதுகலை பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சாதனையை மூன்று ஆண்டுகால அர்ப்பணிப்பின் விளைவு என்று விவரித்த ஆய்வறிக்கைகளை கண்காணித்து வரும் அருள்பணி மிரோஸ்லாவ் கலினோவ்ஸ்கி அவர்கள், "பட்டம் பெற்றவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடருவார்கள்" என்றும் "கல்வி என்பது ஒரு வெகுமதி மட்டுமல்ல, மறுவாழ்விற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும்" என்றும் வலியுறுத்தினார்.

அருள்பணி கலினோவ்ஸ்கி, "பல்கலைக்கழகம் உயர் கல்வித் தரத்தைப் பேணும் அதே வேளையில் கைதிகளுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது" என்றும் "இத்தகைய சிறைக்கல்வி திட்டத்தில் பங்கேற்பவர்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை" என்றும் குறிப்பிட்டார்.

மேலும் "குடும்ப ஆதரவும் நேர்மறையான சமூக சூழலும் வெற்றிகரமான சமூக ஒருங்கிணைப்புக்கு முக்கியமானவை" என்றும் தெரிவித்தார்.

இந்தப் பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டில் இருந்து தனது சிறைச்சாலை கல்வித் திட்டத்தின் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கி வருகிறது. இதுவரை, போலந்து முழுவதிலும் உள்ள பெண்கள் உள்பட 63 கைதிகள் பட்டம் பெற்றுள்ளனர். இந்த முயற்சி அனைத்துலக கவனத்தைப் பெற்றுள்ளதுடன் உரோமில் உள்ள சிறை அதிகாரிகள், கல்வியை தனிப்பட்ட மாற்றம் மற்றும் சமூக மறு ஒருங்கிணைப்புக்கான ஒரு ஆற்றல்மிக்க வழியாக அங்கீகரித்து, லம்சா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதேபோன்ற திட்டத்தை முன்னெடுப்பது பற்றி பரிசீலித்து வருகின்றனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 12:25