தேடுதல்

நெறி  காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள்  

நெறி காட்டும் ஆளுமைகள்

பலர் வரலாற்றில் உயர்கிறார்கள்; ஆனால் வெகு சிலரே வரலாற்றையே உயர்த்துகிறார்கள்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஆல்பிரட் நோபல் டைனமைட் என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்த புகழ்பெற்ற விஞ்ஞானி. அந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அவர் பெரும் செல்வத்தையும் சேர்த்திருந்தார்.

ஒருநாள் அதிகாலையில் வழக்கம்போல் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு செய்தி அவரது கவனத்தை ஈர்த்தது. அதில், “விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் மரணம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் இறந்தது அவரது சகோதரர்; ஆனால் தவறுதலாக செய்தித்தாள் நோபலின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தது.

தான் உயிருடன் இருக்கும்போதே, தனது மரணத்தைப் பற்றிய செய்தியை வாசித்த நோபல் அதிர்ச்சியடைந்தார். ஆனால் அதைவிட அவரை வேதனைப்படுத்தியது, அந்தச் செய்தியில் அவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த வரிகள். “டைனமைட் என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்து, பலரின் உயிரிழப்பிற்கும் அழிவிற்கும் காரணமான மரண வியாபாரி” என்று அவரை வர்ணித்திருந்தனர்.

அந்த வார்த்தைகள் நோபலின் மனதை ஆழமாகத் தொட்டன. “நான் இறந்தபின் மக்கள் என்னை இப்படித்தான் நினைவுகூர்வார்களா? என் வாழ்க்கையின் அர்த்தம் இதுதானா?” என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

அதன் விளைவாக, தனது செல்வத்தின் பெரும்பகுதியை மனிதகுல நலனுக்காக ஒதுக்க முடிவு செய்தார். அறிவியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் உலக அமைதிக்காகச் சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளை நிறுவினார். அவையே இன்று உலகம் முழுவதும் மதிக்கப்படும் நோபல் பரிசுகள். அன்னை தெரசா பெற்ற உலக அமைதிக்கான நோபல் பரிசும் இதன் ஒரு பகுதியாகும்.

இன்று ஆல்பிரட் நோபல் ஒரு “மரண வியாபாரி”யாக அல்ல, மனிதகுல நலனுக்காக சிந்தித்த விஞ்ஞானியாக நினைவுகூரப்படுகிறார். பலர் வரலாற்றில் உயர்கிறார்கள்; ஆனால் வெகு சிலரே வரலாற்றையே உயர்த்துகிறார்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 12:55