தேடுதல்

"இயேசுவைச் சித்தரிப்பது எப்போதும் ஒரு மறைபொருள் பயணம்" – மார்ட்டின் ஸ்கோர்செஸி

இயேசுவைச் சித்தரிக்கும் எந்தவொரு கலைப்படைப்பும் அவரது மனிதநேயம் மற்றும் இறைத்தன்மை குறித்த ஆழமான மறைபொருள் கேள்விகளை எழுப்பும் என்று திரைப்பட இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி தெரிவித்துள்ளார். தனது தி லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் கிரைஸ்ட் திரைப்படம், கிறிஸ்துவின் மறைபொருளை விளக்குவதற்கானதல்ல; மாறாக, அவரைப் பற்றிய ஆழமான உரையாடலைத் தொடங்குவதற்கான நேர்மையான முயற்சி என்றும் அவர் கூறினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"இயேசுவைச் சித்தரிக்கும் எந்தவொரு கலைப் படைப்பும் மர்மமான உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது" என்றும், "அது கிறிஸ்துவின் வாழ்க்கை, மனிதநேயம் மற்றும் இறைத்தன்மை குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறது" என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் மார்ட்டின் ஸ்கோர்செஸி கூறியுள்ளார்.

தனது திரைப்படமான 'கிறிஸ்துவின் இறுதிச் சோதனை' எனப் பொருள்படும் 'தி லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் கிரைஸ்ட்' (The Last Temptation of Christ) குறித்துப் பேசிய போது இது தனது வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான படைப்புகளில் ஒன்று என்று விவரித்துள்ளார்.

நிகோஸ் கசாண்ட்ஸாகிஸின் நாவலால் தான் அதிகமாக ஈர்க்கப்பட்டதாகவும், குறிப்பாக இயேசுவை முழுமையான மனிதராகவும் முழுமையான இறைவனாகவும் அந்த நாவல் ஆராய்ந்த விதம் தன்னை ஈர்த்ததாகவும் ஸ்கோர்செஸி விளக்கியுள்ளார்.

"'இறுதிச் சோதனை' என்பது, சாதாரண மனித வாழ்க்கை வாழ்வதற்கான அழைப்பாகும். ஏனெனில், சாதாரண வாழ்க்கையே பெரும்பாலும் இறைவனின் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்வாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவின் மறைபொருளை முழுமையாக விளக்குவதாக அல்லாமல், அதனை ஆராய்வதற்கான நேர்மையான ஒரு முயற்சியே தனது திரைப்படம் என்று கூறிய ஸ்கோர்செஸி, இதனை பார்வையாளர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் மீது கொண்ட ஆழ்ந்த அன்பும் மரியாதையும், அவரைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்க வேண்டும் என்ற உண்மையான விருப்பமும் கொண்ட படைப்பாக அங்கீகரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"தொலைவில் இருக்கும் ஒரு மதச் சின்னமாக அல்லாமல், மக்களின் இதயங்களிலும் வாழ்க்கையிலும் இயேசு ஒரு வாழும் பிரசன்னமாக இருப்பதை உணர வைப்பதே தனது இலக்கு" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படம் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பு, வத்திக்கானுக்குச் சென்றது மற்றும் அருள்பணி அன்டோனியோ ஸ்படாரோ உடனான நட்பு ஆகியவை தன்னை நெகிழ வைத்ததாக ஸ்கோர்செஸி தெரிவித்துள்ளார்.

இறுதியாக, திரைப்படத்தின் வாயிலாக கிறிஸ்துவைப் பற்றிய உரையாடலை முன்னெடுத்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஸ்கோர்செஸி, இந்தத் திரையிடலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 12:02