தேடுதல்

கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

“வாழ்க்கையில் பலர் தோல்வியடைவதற்குக் காரணம் பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல; சிறிய இலக்குகளில் வெற்றி பெற்று அங்கேயே நின்றுவிடுவதுதான்.”

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஒரு நாள் திடீரென ஒரு செய்தி பரவியது. யாரோ ஒருவர் ஒரு ரயில் பெட்டியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்ததால், ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பானது. அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. வெடிகுண்டைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. அதனை செயலிழக்கச் செய்ய நிபுணர் குழுக்களும் களமிறங்கின. நிலையத்தின் ஒவ்வொரு மூலையையும் அவர்கள் சோதனை செய்யத் தொடங்கினர். அந்த நேரத்தில், பத்தாவது பெட்டியில் பயணம் செய்த ஒரு சுற்றுலா குழுவினர், ரயில் தாமதமாகும் என்பதை உணர்ந்து தங்களின் உணவுப் பொட்டலங்களைத் திறந்தனர். ஒரு பொட்டலத்தில் கோழிப் பொரியல், மற்றொன்றில் முட்டைப் பொரியல், இன்னொன்றில் மட்டன் சுக்கா, கடைசியில் கருவாடு இருந்தது.

அப்போது ஒரு மோப்ப நாய் அந்தப் பெட்டிக்குள் வேகமாக வந்தது. அது ஒவ்வொரு இடத்தையும் முகர்ந்து கொண்டு வந்தது. உணவுப் பொட்டலங்கள் இருந்த இடத்தை அடைந்ததும் நின்றது. நாக்கைத் தொங்கவிட்டபடி உணவைப் பார்த்தது; பின்னர் பயணிகளைப் பார்த்தது. ஒரு கணம் அதன் கவனம் உணவின் மீது சென்றது. ஆனால் அடுத்த நொடியே அது தன் பணியை நினைவுகூர்ந்தது. உணவைப் புறக்கணித்து, வெடிகுண்டைத் தேடும் தனது பணியைத் தொடர்ந்தது. அதன் பிறகு அந்த உணவுப் பொட்டலங்களை அது திரும்பிப் பார்க்கவே இல்லை. இதைக் கண்ட ஒருவர் வியந்து கூறினார்: “இதுதான் Single-mindedness — ஒற்றை இலக்கை நோக்கிய சிந்தனையும் செயல்பாடும்.” உயர்ந்த இலக்கை நோக்கி நீ ஓடுகிறாயா? அப்படியானால், அந்த உயர்ந்த இலக்கும் உன்னை நோக்கி வரும்.

லெஸ் பிரவுன் கூறும் எச்சரிக்கை இதுதான்:

“வாழ்க்கையில் பலர் தோல்வியடைவதற்குக் காரணம் பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல; சிறிய இலக்குகளில் வெற்றி பெற்று அங்கேயே நின்றுவிடுவதுதான்.”

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூன் 2026, 12:11