கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  (©kadhaigal 3)

கதைகள் ஆயிரம்

பேராசை மனிதனை அநீதிக்கும் பொய்யுக்கும் இட்டுச் செல்லலாம்; ஆனால் நீதி எப்போதும் உண்மையின் பக்கமே நிற்கும். எவ்வளவு செல்வம் சேர்த்தாலும், இறுதியில் மனிதன் அடைவது ஒரு சாண் கல்லறை நிலம் மட்டுமே என்பதை மறந்துவிடக் கூடாது.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஒரு பணக்காரன் பத்தாயிரம் ரூபாய் இருந்த தன் பணப்பையைத் தொலைத்துவிட்டான். தேடியும் கிடைக்காததால், "என் பணப்பையைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு 2000 ரூபாய் பரிசு வழங்கப்படும்" என்று ஊர் முழுவதும் தண்டோரா போடச் செய்தான். நேர்மையான ஏழை ஒருவர் அந்தப் பையைக் கண்டுபிடித்துப் பணக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் பரிசுப் பணத்திற்காகக் காத்திருந்தார். பணப்பை கைக்கு வந்ததும் அந்தப் பேராசைக்கார கஞ்சனுக்குப் பரிசுப் பணத்தைத் தர மனமில்லை. உடனே ஒரு பொய் வழக்கை ஜோடித்தான். "என் பைக்குள் பத்தாயிரம் ரூபாயோடு ஒரு வைர மோதிரமும் இருந்தது. இப்போது அதைக் காணவில்லை. இந்த ஏழைதான் அதைத் திருடியிருக்க வேண்டும்" என்று பழிபோட்டு, நீதிமன்றத்திற்குச் சென்றான். வழக்கை விசாரித்த நீதிபதிக்கு உண்மை புரிந்துவிட்டது. ஏழையின் நேர்மையையும், பணக்காரனின் ஏமாற்று வேலைகளையும் உணர்ந்த அவர், அன்றிரவு யோசித்து மறுநாள் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கினார்:

நீதிபதியின் தீர்ப்பு: "பணக்காரரே, உங்கள் பைக்குள் வைர மோதிரம் இருந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த ஏழை கொண்டு வந்த பையிலோ வைர மோதிரம் இல்லை, வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டும்தான் இருக்கிறது. எனவே, இது உங்களுடைய பை கிடையாது! உண்மையான சொந்தக்காரர் யார் என்று தெரியாததால், இந்த 10,000 ரூபாய் பணமும், பையும் இதைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்த இந்த ஏழைக்கே சொந்தம். உங்களுக்கு வைர மோதிரத்தோடு இருக்கும் பை வேண்டும் என்றால், மறுபடியும் ஊருக்குள் தண்டோரா போட்டுத் தேடிப் பாருங்கள்!"

பணக்காரனின் பேராசைக்குக் கிடைத்த சவுக்கடியாக இந்தத் தீர்ப்பு அமைந்தது. அந்த நிலத்தை என் தாத்தா வாங்கினார்... இந்த நிலத்தை என் அப்பா வாங்கினார்...இதோ, அடுத்த நிலத்தை நான் வாங்கப் போகிறேன்...என்று மனிதன் பெருமையாக மார்தட்டிக்கொள்கிறான். ஆனால், மனிதன் கடைசியாகப் போய்ச் சேரும் கல்லறை நிலம் அவனைப் பார்த்து நக்கலாக மார்தட்டிச் சொல்கிறது:

"உன் தாத்தாவை விழுங்கியவள் நான் தான்..." "உன் அப்பாவை விழுங்கியவளும் நான் தான்..." "இதோ, பேராசையோடு திரியும் உன்னையும் சீக்கிரமே நான் தான் விழுங்கப் போகிறேன்!"

ஆறறிவு படைத்த மனிதன் சில நேரங்களில் அநீதி இழைத்தாலும், நீதி எப்போதும் உண்மையின் பக்கமே நிற்கும். பேராசை பிடித்த மனிதர்களுக்கு வானமே எல்லை என்றாலும், இறுதியில் அவர்கள் போய்ச் சேரும் இடம் ஒரு சாண் கல்லறை நிலம் மட்டுமே!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூன் 2026, 15:01