கதைகள் ஆயிரம்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
தலைசிறந்த ஞானியொருவர் நடைமுறை வாழ்க்கையின் எதார்த்தங்களை நன்கு அறிந்தவராக இருந்தார். நீதிக்காக உறுதியாகக் குரல் கொடுப்பவரும், உண்மையை உலகிற்கு எடுத்துரைப்பவரும், பொய்மைக்கு ஒருபோதும் இடமளிக்காதவரும் ஆவார். அவரது நேர்மையைப் பற்றி கேள்விப்பட்ட சீன அரசன், அவரை அரண்மனைக்கு அழைத்து முக்கிய அமைச்சராக நியமித்தான். அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு வழக்கு அவரது முன் வந்தது. அந்த நகரின் பெரும் பணக்காரரின் வீட்டில் இருந்து ஒரு ஏழை அரிசி திருடியிருந்தான். இதுவே வழக்கு. ஞானி வழக்கை முழுமையாக விசாரித்து, இரு தரப்பினரின் வாதங்களையும் கவனமாகக் கேட்டார். மேலும் ஆராய்வதற்காக ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினார்.
ஒரு வாரம் கழித்து தீர்ப்பை அறிவித்தார். “திருடிய ஏழைக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை. ஆனால், அந்தப் பணக்காரருக்கு பத்து மாதங்கள் சிறைத் தண்டனை,” என்றார். இதைக் கேட்ட பணக்காரன் அதிர்ச்சியடைந்து, “நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டான். அதற்கு ஞானி, “இந்த நகரத்தின் பெரும்பாலான செல்வத்தை நீயே குவித்து வைத்திருக்கிறாய். உழைப்பின் வலி உனக்குத் தெரியாது. உன் அளவுக்கு மீறிய செல்வச் சேர்க்கையே இந்த ஏழையைத் திருடனாக மாற்றியுள்ளது. ஒரு ஏழையைத் திருடனாக்கியதற்கான பொறுப்பு உனக்கும் உண்டு,” என்றார். இந்தக் கதை நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது: அளவுக்கு மீறிய செல்வக் குவிப்பு சமூக அநீதியை உருவாக்குகிறது. சொத்துக்களை மட்டும் நாடாமல், பொதுநலனுக்காக வாழ்பவரே உண்மையில் மக்களின் சொத்தாக மாறுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.