திருப்பீடத்திற்கான ஆஸ்திரேலிய தூதரகத்தில் நடைபெற்ற உலக அமைதி குறியீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு. திருப்பீடத்திற்கான ஆஸ்திரேலிய தூதரகத்தில் நடைபெற்ற உலக அமைதி குறியீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு. 

உலகளவில் அதிகரித்து வரும் மோதல்கள் குறித்து எச்சரித்துள்ள 2026 உலக அமைதிக் குறியீடு

2026ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டு அறிக்கை, கடந்த 12 ஆண்டுகளாக உலக அமைதி தொடர்ந்து சீர்குலைந்து வருவதாக எச்சரித்துள்ளது. நாடுகளுக்கிடையேயான மோதல்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு வன்முறைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக் குறியீடு (GPI), உலகளாவிய அமைதியின் கவலையளிக்கும் சித்திரத்தை முன்வைத்துள்ளது.

அந்த அமைப்பின் ஆய்வுகளின்படி, கடந்த 12 ஆண்டுகளாக உலகளாவிய அமைதி தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. நாடுகளுக்கிடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதுடன், 2018 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் 11,500 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளன. மேலும், உள்நாட்டு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 2007ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்டீவ் கில்லேலியா என்பவரால் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக அமைதிக் குறியீடு,  இராணுவமயமாக்கல், நடந்து கொண்டிருக்கும் மோதல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று முக்கியக் கூறுகளின் மூலம் அமைதியை அளவிடுகிறது.

உரோமில் 2026 ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக் குறியீட்டு அறிக்கையை சமர்ப்பித்த கில்லேலியா, "நவீன மோதல்கள் நீண்ட காலம் நீடிக்கின்றன" என்றும் "அவை அமைதி ஒப்பந்தங்கள் மூலம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"1970களில் 23 விழுக்காடு மோதல்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டன என்றால், 2010களில் அந்த எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடாக குறைந்துள்ளது" என்றும் "தீர்க்கப்படாத உள்ளூர் மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

போர்க்களத்தில் ஆளில்லா விமானம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பங்களிப்பையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயக்கப்படும் ஆயுதங்கள் குறித்த அறநெறி சார்ந்த கவலைகளை எழுப்பிய கில்லேலியா அவர்கள், செயற்கை நுண்ணறிவால் நிகழும் பிழைகள் அல்லது தவறான புரிதல்கள் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் "இராணுவத்திற்காக மிகப்பெரிய அளவில் செலவுகள் செய்யப்படுவதாகவும், அமைதியை உருவாக்குவதற்கு மிகச்சிறிய அளவே முதலீடு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீடித்த அமைதியை உருவாக்க, நாடுகளுக்கு இடையிலான உரையாடலை அதிகரித்தல், உள்நாட்டுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முன்னுரிமைகளை கில்லேலியா முன்மொழிந்துள்ளார்.

மேலும், பிளவுகள் பெருகிவரும்  உலகில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அமைதி, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்திற்கான வலிமையான குரல்களாக செயல்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூன் 2026, 11:59