தேடுதல்

காசா காசா 

காசாவின் இருளிலிருந்து நம்பிக்கையின் ஒளிவரை: ஒரு உயிர் பிழைத்தவரின் இறைவேண்டல்

காசாவிலிருந்து தப்பி யோர்தானை அடைந்த கிறிஸ்தவப் பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் சகோதரர் இன்னும் போரில் சிக்கியுள்ளதால், தனது விடுதலை முழுமையடையவில்லை என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார். போரின் பயங்கரத்திலிருந்து உயிர்பிழைத்தாலும், தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக இறைவனிடம் கண்ணீருடன் பிரார்த்தனை செய்வதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

காசாவிலிருந்து அண்மையில் தனது சகோதரியுடன் தப்பி வந்த ஒரு கிறிஸ்தவப் பெண், போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியது குறித்து உருக்கமான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். யோர்தானுக்கான தனது பயணத்தை, ஒரு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுதலின் ஒளிக்குச் செல்வதாக அவர் விவரித்துள்ளார்.

காசாவிலிருந்து வெளியேறிய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், எல்லையைக் கடந்து வந்த அந்த தருணம், இருள் சூழ்ந்த துயர நிலையிலிருந்து நம்பிக்கையும் புதிய வாழ்வும் நிறைந்த ஒளியை நோக்கி பயணிப்பதைப் போன்றதாக இருந்தது என்று கூறியுள்ளார்.

"பல மாதங்களாக குண்டுவெடிப்புகள், பயம் மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் வாழ்ந்த பிறகு, வெடிமருந்து வாசனையற்ற காற்றைச் சுவாசிப்பதாகவும், அழிவுக்குப் பதிலாக ஒளி நிறைந்த தெருக்களைக் காண்பதாகவும் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

தான் பாதுகாப்பான இடத்தை அடைந்தாலும், தனது பெற்றோர் மற்றும் சகோதரர் இன்னும் காசாவில் சிக்கியிருப்பதால், தனது மகிழ்ச்சி முழுமையடையவில்லை என்று கூறிய அவர் "உடலின் ஒரு பகுதி இன்னும் கல்லறையில் சிறைப்பட்டிருக்கும் போது, எப்படி உயிர்த்தெழுதல் நிகழ முடியும்?" என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் யோர்தானில் தான் அனுபவிக்கும் பாதுகாப்புக்கும், தனது அன்புக்குரியவர்களின் துன்பத்திற்கும் இடையே தனது இதயம் பிளவுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் உயிர்த்தெழுதலின் உருவகங்களைப் பயன்படுத்தி, தன்னை வெறுமையான கல்லறையில் அழும் மரிய மக்தலேனாவுடன் ஒப்பிட்டுள்ள அவர், "தான் உண்ணும் ஒவ்வொரு உணவும் தனது சகோதரனின் பசியை தனக்கு நினைவூட்டுகிறது" என்றும் "மேலும் ஒவ்வொரு அமைதியான இரவும் தொடரும் வன்முறைக்கு மத்தியில் அவனது பாதுகாப்பிற்கான கவலையால் நிறைந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.

தனது உருக்கமான இறைவேண்டலில், “காசாவின் வாயிலிலிருந்து கல்லை உருட்டித் தள்ளி, உமது மக்களை அமைதி மற்றும் சுதந்திரத்தின் ஒளிக்குள் நடத்திச் செல்லும்” என்று இறைவேண்டல் செய்துள்ள அவர், தாம் உயிர் தப்பியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் அதேவேளையில், தன் குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் மீண்டும் தன்னுடன் இணைந்து, போர் ஏற்படுத்திய அச்சம், துயரம் மற்றும் அழிவிலிருந்து விடுதலை பெறும் நாளில்தான் உண்மையான உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 12:32