காங்கோவில் எபோலா அச்சுறுத்தல்: குழந்தைகள் மீது அதிக தாக்கம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகளவில் எபோலா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ எட்டியுள்ள நிலையில், காங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதியில் ஏறத்தாழ 29.5 இலட்சம் குழந்தைகள் மற்றும் இளையோர் ஆபத்தில் இருப்பதாக யூனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஜூன் 19 நிலவரப்படி, கிழக்கு காங்கோவில் பதிவான எபோலா நோய்த் தொற்றுகளில் 15 விழுக்காடும், உயிரிழப்புகளில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களும் குழந்தைகள் மற்றும் இளையோரே என யூனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், எபோலா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் பெரியவர்களை விட இரு மடங்கு அதிகமாக உயிரிழக்கும் ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பட்டுள்ளது.
எபோலா தொற்றின் முக்கிய பாதிப்பு மையமாக இடூரி மாகாணம் தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக மொங்க்ப்வாலு, ருவாம்பாரா மற்றும் புனியா ஆகிய பகுதிகளில் அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், எபோலா காரணமாக பெற்றோரை இழந்த 135 குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை, சமூக ஆதரவு மற்றும் மாற்றுப் பராமரிப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நோய்த் தொற்றால் மட்டுமல்லாமல், பெற்றோரை இழத்தல், மனநலப் பாதிப்புகள், கல்வி மற்றும் அடிப்படை நலவாழ்வுச் சேவைகள் கிடைப்பதில் ஏற்படும் தடைகள் போன்ற பல்வேறு சவால்களையும் குழந்தைகள் எதிர்கொண்டு வருகின்றனர். நீண்டகால மோதல்கள், இடம்பெயர்வுகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த தடுப்பூசி பயன்பாடு ஆகியவை அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன.
இதற்கிடையில், அண்டை நாடான உகாண்டாவில் காங்கோவிலிருந்து வந்தவர்களிடையே 20 எபோலா பாதிப்புகளும், 2 உயிரிழப்புகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
எபோலா பரவலைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து வழங்கவும் அரசுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து யூனிசெஃப் செயல்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் வழங்குவதற்கு உலக நாடுகளின் ஆதரவை அது கோரியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.