தேடுதல்

2026.06.26 CHILDERN

போரின் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்

ஆயுத மோதல்களால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அண்மையில் வெளியிட்டுள்ள குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த அறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 38,558 தீவிர உரிமை மீறல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமை மீறல்களில் கொலைகள், காயங்கள், ஆயுதக் குழுக்களில் கட்டாயமாகச் சேர்த்தல், கடத்தல்கள், பாலியல் வன்முறை, மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுதல், கல்வி மற்றும் நலவாழ்வுச் சேவைகள் பாதிக்கப்படுதல் போன்றவை அடங்கும்.

வரலாற்றிலேயே முதல்முறையாக, அரசின் இராணுவப் படைகளும் அவர்களுடன் இணைந்து செயல்படும் தரப்பினரும், அரசு சாரா ஆயுதக் குழுக்களை விட குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடுகள் அனைத்துலக சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் குறித்த கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா அவையின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மூன்று அதிர்ச்சிகரமான போக்குகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. முதலாவதாக, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் பெரும் அச்சுறுத்தலாக நீடிக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் இறந்த குழந்தைகளில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் இதனால் இறந்துள்ளனர். உக்ரைன், ஆப்கானிஸ்தான், மியான்மர், இஸ்ரேல், பாலஸ்தீன அரசு மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இரண்டாவதாக, 3,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தல், கட்டாய ஆள்சேர்ப்பு மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல தீவிர உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மூன்றாவதாக, 8,000-க்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன, இதனால் குழந்தைகள் நலவாழ்வு, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை சேவைகள் கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆளில்லா விமானங்கள், தன்னிச்சையாக செயல்படும் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடக்கும் போர்கள் அதிகரித்திருக்கும் சூழல் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி ஆபத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை உள்ளது. 2025 ஆம் ஆண்டில், 13,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆயுதப் படைகள் அல்லது குழுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐநா தலைமையிலான முயற்சிகள் மற்றும் கூட்டாண்மை மூலம் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டு ஆதரவான சூழலைப் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஜூன் 2026, 14:20