தேடுதல்

அதிபர் பாஸ் அதிபர் பாஸ் 

பொலிவியாவில் தீவிரமடையும் போராட்டங்கள்: நெருக்கடி நிலை அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொலிவியாவில் வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் 17 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொலிவியாவில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட சிக்கன மற்றும் அதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக, வன்முறை நிறைந்த போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் மீது வெடிபொருள்களும் வீசப்பட்டுள்ளன. இந்தக் கலவரத்தில் பதினேழு பேர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள், கனரக வாகன ஓட்டுநர்கள், பழங்குடியினக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், ரத்து செய்யப்பட்ட எரிபொருள் மானியங்களை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைநகர் லா பாஸ், முற்றுகைகளால் முடங்கியுள்ள சூழலில், கடந்த அக்டோபரில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்து தனது நிர்வாகத்தைத் தொடங்கி, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால 'சோசலிசத்தை நோக்கிய இயக்கம்' (Movement Towards Socialism) என்ற கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அதிபர் பாஸ், தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், "வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை நீக்குவதே தனது நோக்கம்" என்றும் "பொலிவியர்களின் உரிமைகளைப் பறிப்பது அல்ல" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நெருக்கடி நிலையை அமல்படுத்தும் அரசின் முடிவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்குமா என்பது அடுத்த கட்ட முக்கியச் சவாலாகக் கருதப்படுகிறது. ஒப்புதல் வழங்கப்பட்டால், அந்த நிலை 90 நாட்கள் வரை தொடரக்கூடும் என்பது குறிப் பிடத்தக்கது

ஒருபுறம் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மறுபுறம் உள்நாட்டு போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பும், அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்த முன்னாள் அதிபர் ஈவோ மோரேலஸின் எதிர்ப்பும் அதிபர் பாஸுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூன் 2026, 12:47